பக்கம்:இன்ப வாழ்வு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

37


நம் புலவர்கள் திங்களை விட்டு வைத்தார்களா என்ன! குமுத (ஆம்பல்) மலரின் கணவனாக மதியத்தைக் கூறி வைத்தார்கள். இதனை,

“ஆம்பல் களிகூர வரும் வெண்ணிலாவே-உனக்கு அம்புயம் செய் தீங் கெதுவோ வெண்ணிலாவே’ என்னும் தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடலாலும்,

‘காமக் கருத்தாக் குமுத நாதன்

கங்குல் வரக் கண்டும்’ என்னும் தனிப்பாடல் திரட்டுச் செய்யுளாலும் உணரலாம். திங்கள் குமுத நாதனாம்.-ஆம்பலின் கணவனாம்!

ஆனால் உண்மையில் ஞாயிறும் திங்களும் மலர்களின் கணவன்மார்களாக முடியுமா? முடியாதே! கதிரொளியாலும் நிலவொளியாலுமா மலர்கள் கருவுற்றுக் காய் காய்க்கின்றன? இல்லையே! கதிரவனும் மதியமும் புறப்படும் நேரத்தில் வழக்கமாக மலர்கள் மலர்வதால் அவற்றை அம்மலர்களின் கணவன்மார்களாகக் கூறியிருப்பது ஒருவகை இலக்கிய மரபேயாகும். காய் காய்க்கும் மலர்களின் கணவன்மார்கள் வேறே உளர். எனவே, கதிரவனையும் திங்களையும், மலர்களின் மலர்ச்சிக்கு உதவும் உதவியாளராக -- ஆதரவாளராக-நண்பராக வேண்டுமானால் ஒரு வகையில் கூறலாம். இதனை நன்கு உணர்ந்ததனால்தானோ, பிங்கல முனிவர் தம் பிங்கல நிகண்டில் குமுத சகாயன்’ என்றும், மண்டல புருடர் தம் சூடாமணி நிகண்டில் குமுத நண்பன்’ என்றும் திங்கட்குப் பெயர் கூறியுள்ளனரோ என்னவோ? சகாயன், நண்பன் என்னும் சொற்கள் கணவனைக் குறிக்கா அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/38&oldid=550768" இலிருந்து மீள்விக்கப்பட்டது