பக்கம்:இன்ப வாழ்வு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

'மங்கை யொருத்தி தருஞ் சுகமும் எங்கள் மாதமிழ்க்கு ஈடில்லை’ என்பது பாவேந்தர் பாரதிதாசனது பாடல். பெண்ணின்பத்தினும் பெரிது தமிழின்பம் என்றால், பெண்ணொடு வாழும் அகப்பொருள் இன்ப வாழ்வைப் பற்றிப் பேசும் தமிழ் நூற்கள் தரும் இன்பமோ, சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது போன்றதாம்.

ஆம்! இன்ப வாழ்வு’ என்னும் பெயரிய இந்நூல் முழுக்க முழுக்க அகப்பொருள் இன்பத் துறை பற்றியதே. தமிழிலுள்ள சிறந்த சில இன்ப இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே இவ்வெளியீடு.

இந்த நூலின் பாயிரவியலில் இன்ப இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சியும், அஃறிணையியலில் மரஞ்செடி கொடிகளும் பறவைகளும் விலங்குகளும் ஆணும் பெண்ணுமாய் இணைந்து நடத்தும் இல்லற இன்ப வாழ்வும், உயர்திணையியலில் மக்களின் உயர்ந்த காதல் இன்ப வாழ்வு முறையும் இடம் பெற்றுள்ளன.

இந்நூற் கட்டுரைகளை அச்சுக்குக் கொடுக்கும் அளவில் அழகாகப் பெயர்த்தெழுதித் தந்த என் நண்பர்கள் திரு வி. திருவேங்கடம், திரு முருக. சடகோபன் ஆகியோர்க்கு என் நன்றி.

இந்நூல் வெளியாவதற்குப் பலவகையிலும் உதவி புரிந்த பைந்தமிழ்ப் பதிப்பகப் புரவலர் உயர் திரு சிங்கார குமரேசனார் அவர்கட்கு என் நன்றி மிகவும் உரித்து.

சுந்தர சண்முகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/5&oldid=550781" இலிருந்து மீள்விக்கப்பட்டது