பக்கம்:இன்ப வாழ்வு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

61


உயர ஏறுமுகத்திலேயே இருக்கின்றன - அதற்கு மேல் இன்னும் உயரமான பொருள் ஏதேனும் இருக்குமானாலும் ஏறிப்போகும் என உயரத்தின் ஏற்றத்திற்குக் கூர்சீவி விட்டிருக்கிறார் மாபெரும் புலவர் சாத்தனார். எத்தனை சொல்நயம்! எத்துணை பொருட்செறிவு!

இப் பகுதியிலிருந்து அன்னங்களின் இன்ப அன்பு வாழ்வினை இனிதே அறிந்தோம். இனிப் புறாக்களின் இன்ப இல்லறங் குறித்து ஒரு சிறிது பேசுவாம்.

புறா

புறாக்களை நாம் அனைவரும் பார்த்தறிந்துள்ளோம். மக்களுள் உயர்ந்த ஒழுக்கம் உடையவரைப் போலவே, புறாக்களும் ஆண் பெண் குடும்ப உறவில் உயர்ந்த நெறி முறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு பெண் புறா தனக்கென்று தான் வரித்துக் கொண்ட ஒர் ஆண் புறாவைத் தவிர, வேறு ஆண் எதையும் நெருங்க விடாதாம். அதே போலச் சேவல் புறாவும் தன் பெடையைத் தவிர, வேறொரு பெடை எவ்வளவு தான் கவர்ச்சியாயிருந்தாலும் அதனைத் திரும்பியும் பார்க்காதாம். புறாக்களுள் ஆணாகட்டும் பெண்ணாகட்டும்- தன் துணை இறந்து விட்டால்தான் மற்றொன்றைத் துணையாகக் கொள்ளுமாம். எவ்வளவு அழகிய அன்பு ததும்புகிறஅதே நேரத்தில் அறிவு நிரம்பிய வாழ்க்கையினைப் புறாக்கள் மேற்கொண்டிருக்கின்றன பாருங்கள்! மாண்பு மிக்க கற்புநெறி கடவாத புறாக்கள், மணவிலக்குச் செய்து கொள்வது இல்லையென்றாலும், துணை இறந்துவிடின் மறுமணம் செய்து கொள்ளத் தயங்குவது இல்லை போலும்! இதில் தவறொன்றும் இல்லையே! சரியான முறைதானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/62&oldid=550795" இலிருந்து மீள்விக்கப்பட்டது