உயர்திணை யியல்
குற்றாலக் குறவஞ்சி யின்பம்
"குற்றாலக் குறவஞ்சி” என்னும் பெயரைக் கேட்கும் போதே குளிருகின்றது மனம். ஏன்? தன்னிடம் உள்ள நீர் வீழ்ச்சியால், தன்னை உலகத்தாருக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும் குற்றால மலையின் குளிர்ச்சியினை விரும்பாதவர் எவர்? உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறவஞ்சி நாடகத்தைக் கொள்ளாதவர் எவர்?
தென்பாண்டி நாட்டாராகிய திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய நாடகமே குற்றாலக் குறவஞ்சியாகும். குற்றாலத் திலமர்ந்து கூத்தாடும் சிவனைத் தலைவனாகக் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லுவதைப் பற்றியது ஆகையாலும், குறவன் - குறத்தியின் காதலை ஒவியப் படுத்துவது ஆகையாலும், இந்நாடக நூலுக்குக் "குற்றாலக் குறவஞ்சி" என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. படிக்கப் படிக்கச் சுவை தருகின்ற இந்நூலுள், பழந்தமிழ்க் குடிகளின் பண்புகள் பல பகரப்பட்டிருப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி தருகின்றது. இனி நயம் மிகுந்த இந் நாடகத்துள் புகுவோம் நாம்: