பக்கம்:இன்றும் இனியும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அ.ச. ஞானசம்பந்தன் மனிதனுடைய உணர்ச்சி ஆற்றொழுக்குப் போன்றது என்று கூறுவர் மனநூலார். ஆற்றில் நீர் இடையறாது ஒழுகுகிறது. இடையே ஏதேனும் தடை ஏற்பட்டால் உடனே அதனைத் தாண்டிச் செல்ல வேண்டி நீர் மட்டம் உயர்கிறது. தடை எவ்வளவு உயரமானாலும் அவ்வளவு உயரமும் உயர்ந்து சென்று பிறகு கீழ் வீழ்கிறது. அதேபோல நாம் ஒருவரிடம் செலுத்தும் அன்புணர்ச்சியும் ஆற்றொழுக்குப் போலச் சென்று கொண்டிருக்கிறது. அதற்குத் தடை ஏற்படும் வரை அவ்வுணர்ச்சி எவ்வளவு ஆழமானது. எத்துணை வேகமானது என்பவற்றை நாமே அறிவதில்லை. ஆனால், அன்பு செய்யப்பட்டவர் நம்மை விட்டுப் பிரிகையில் இவ்வன்பு வெள்ளம் தடைப்படுகிறது. பிரிவு என்னும் தடை எதிர்பட்டவுடன்தான் அன்பின் ஆழத்தை அறிய முடிகிறது. சிறிய கால அளவு உடைய பிரிவும், பிறகு சந்திக்கலாம் என்ற உறுதிப் பாட்டுடன் தோன்றும் பிரிவும் சிறிய தடைகளாம். எனவே, இவற்றால் தோன்றும் வருத்தமும் சிறிய அளவில் உள்ளன. ஆனால், இறப்பு என்னும் பிரிவு முழுவதும் அன்பைத் தடை செய்து விடுகிறது. ஆகலின், அது பெருவருத்தமாகவே வெளிப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு தோன்றும் வருத்தம் வெள்ளம் போல் தோன்றுவதாகலின் காலாந்தரத்தில் வடிந்து விடுகிறது. தடையை வெல்ல முடியாத வெள்ளம் பிற வழிகளில் ஒட முற்படுவதுபோல் இவ்வன்பும் இறப்பு என்னும் தடையை மீற முடியாமல் பிற வழிகளில் ஓடிவிடுகிறது. இந் நிலையில் மறக்கப்படவேண்டிய துயரத்தை மீட்டும் நினைவுறுத்தக்கூடிய சக்தி சிலவற்றிற்கு உண்டு. இறந்தவர்களுடன் மிகவும் தொடர்புடைய வர்களோ, தொடர்புடைய பொருள்களோ