பக்கம்:இன்றும் இனியும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அ.ச. ஞானசம்பந்தன் இத்துணை அளவுக்கு உவம உருபுகள் தேவைப்பட்டன போலும். சங்க இலக்கியம் தொடங்கிக் கவிச்சக்கரவர்த்தி பாரதி ஈறாகவுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கியங்களில், தமிழ்க் கவிதைகளில் உவமை பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கின்றது. வினை, பயன், மெய், உரு என்ற நான்கும் பற்றி உவமை தோன்றும் என்று தொல்காப்பியனார் குறிப்பிட்டார். இந்த நான்கின் அடிப்படையில் இன்றைக்கு உவமை நாற்பதாக விரிந்து உள்ளது என்றுகூடக் கூறலாம். மேலே கூறிய நான்கு வகை உபமானங்களையும் அவற்றோடு தொடர்புடைய உருவகங்களையும் கம்பநாடன் பெரிதும் பயன்படுத்துகின்றான். எல்லாக் கவிஞர்களுமே உவமை, உருவகம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் இதன் தனிப்பட்ட சிறப்பு யாதாக இருத்தல்கூடும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது அல்லவா? உண்மையைக் கூறுமிடத்து ஒரு புலவனுடைய சிறப்பை அறிவதற்கு அவன் கையாளும் உவமை ஒன்றே போதுமானது எனலாம். அன்றாடம் நூற்றுக்கணக்கான பொருள்களை நம் போன்றவர்கள் காண்கின்றோம். ஆனால், இப் பொருள்களினிடையே காணப்பெறும் ஒப்புமை நம் அறிவில் படுவதில்லை; பட்டாலும் அவற்றின் உண்மை விளங்குவதில்லை. இன்னும் பல சமயங்களில் புறத்தே காணப்படும் ஒப்புமை மனத்திற் படுகிறதே தவிர, ஆழ்ந்துள்ள ஒப்புமை நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. தொடர்பற்ற பொருள்களினிடையே கூடச் சிறந்த கவிஞன் ஒப்புமையைக் காண்கின்றான்; நம்மையும் காணுமாறு செய்கின்றான். நாம் கண்டுங் காணாத பொருள்களை விளக்க உதவுவதுடன்,