பக்கம்:இன்றும் இனியும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 197 வளர்ச்சி என்று கருதலாம். பல சமயங்களிலே ஒருபக்கமான வளர்ச்சி ஏற்படுகின்ற காரணத்தால் அது விரும்பத் தகாததாய், தீமை பயப்பதாயும் முடிந்து விடுகின்றது. அகல வளர்ச்சி தமிழிலே இன்று ஏற்பட்டுள்ளது என்பதற்கு எந்தவிதமான தடையு மில்லை. ஆனால், ஆழ வளர்ச்சி ஏற்பட்டதா என்பது இலக்கியம் கற்கின்றவர்கள் சந்தேகிக்கக்கூடிய ஒன்று. 16, 17 ஆண்டுகள் இலக்கிய வரலாற்றைக் கற்பித்த ஒரு காரணத்தால் என்னையுமறியாமல் என்னுள் சில சந்தேகங்கள் புகுந்துள்ளன. அவற்றிற்கு இதுவரையிலே என் மனம் தக்கமுறையில் விடை காணவில்லை. தமிழில் அகன்ற வளர்ச்சி நிறைய ஏற்பட்டுள்ளது என்பதிலே ஐயப்பாடு இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த என் மூதாதையரைவிட இன்று என்னுடைய அறிவு பரந்து விரிந்து அகன்று சென்றிருப்பதை நன்றாக அறிகின்றேன். எந்தத் துறையிலே எடுத்துக்கொண்டாலும், அவர்களைக் காட்டிலும் அதிகமான அனுபவம் பரந்து உள்ளதை நன்றாக அறிவேன். எந்த ஒரு துறையிலேயும் அவர்களுடைய அறிவு ஆழ்ந்து சென்றதைப்போல ஆழ்ந்து சென்றுள்ளதா என்றால், இல்லையோ என்று ஐயுறுகின்றேன். முடிந்த முடிவாக நான் ஒன்று சொல்லவில்லை என்பதை மறுபடியும் உங்களுக்கு நினைவூட்டுகின்றேன். தனிப்பட்ட ஒருவனுடைய கருத்துகள் இவை அவ்வளவுதான் அவற்றின் மதிப்பு. என்னைப் பொறுத்தமட்டிலே, எந்தத் துறையாக இருப்பினும் அங்கே அறிவு பரந்து விரிந்து சென்றதுபோல, ஆழ்ந்து சென்றுள்ளதா என்பது ஐயப்பாட்டிற்குரியதாக இருக்கின்றது. அதற்குரிய காரணங்கள் சில. -