பக்கம்:இன்றும் இனியும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 213 நூல்கள் எழுதினார்கள். தருக்கம் என்று நினைத்தாலே அச்சமாக இருக்கும். தருக்க சங்கிரகம், அன்னம் பட்டீயம் முதலான நூல்கள். எப்படி இவர்களுக்கு இப்படிப்பட்ட தருக்க அறிவு ஏற்பட்டது என்று நினைக்கவே முடியவில்லை. ஆங்கிலம் படிக்கவில்லை; கிரேக்க சாத்திரம் படிக்கவில்லை. கையிலிருக்கிற சட்டி, கட்டி இருக்கிற வேட்டி இவ்வளவுதான். வேட்டி எங்கிருந்து வந்தது? பஞ்சிலிருந்து. பஞ்சு எங்கிருந்து வந்தது? இந்தமுறையில் கணக்கைப் போட்டு அறிவுறுத்தி விட்டார்கள். இத்துணை வளர்ந்தும் மறுபடியும் தமிழன் பண்ணிய தவறு யாது? ஒருபக்க வளர்ச்சி தான். உணர்ச்சியையே வளர்த்தான் 12 நூற்றாண்டு வரை. பின்னர் அது தவறு என்று அறிவை மட்டுமே வளர்க்கத் தொடங்கிவிட்டான். சாத்திரமாக எழுதிக் குவித்து விட்டான். ஆக மொத்தம் ஒன்று இந்தப் பக்கத்து வளர்ச்சி அல்லது அந்தப் பக்கத்து வளர்ச்சியாகப் போயிற்று! நடுவு நிலைமையை விட்டு விட்டான். அறிவையும் கொஞ்சம் வளர்க்க வேண்டும், இருதயத்தையும் கொஞ்சம் வளர்க்க வேண்டும் என்ற அந்தச் சூழ்நிலை போய்விட்டதனால்தான், 13, 14-ஆம் நூற்றாண்டுகளின் சாத்திர வளர்ச்சி பிறகு கொஞ்ச காலத்தில் புதைந்து போயிற்று. பெருநூல்கள் என்று சொல்லக்கூடிய ஒன்றும் இல்லாமற் போயிற்று. அந்த முறையிலேதான் இன்று இருந்துகொண்டு வருகின்றோம். இன்றைக்கு எத்தனை பத்திரிகைகள்? எத்தனை நூல்கள்? பஞ்சமே கிடையாது. ஆனாலும், ஐந்து ஆண்டுகள் நிலைக்கக்கூடிய நூல்கள் எத்தனை என்று கணக்குப் போட்டால், இரண்டு கைவிரல் களுக்குள் எண்ணி விடலாம்.