பக்கம்:இன்றும் இனியும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 239 அந்தப் பொருளை அனைவரும் ஒத்துக் கொள்ளும் வரையில் அதற்குத் தடை ஒன்றுமில்லை. ஆகையினாலேதான், இலக்கணக்காரன் ஒரு வரம்பு கட்டினான். யார் எந்த நேரத்தில் பேசினாலும் ஒரு சொல்லுக்கு இதுவே பொருள் என்றும் சொற்கள் தொடர்ந்த வாக்கியத்திற்கு இதுவே பொருள் என்றும் இலக்கணம் பேசுகிறது. அகத்தியம் என்றாலென்ன? மேலே கூறிய முறையில் மொழியைக் காக்கச் செய்யப் பெற்ற ஓர் இலக்கணம். வினா: இலக்கியத்தைப் பயில்வோனுக்கு நூல் தோன்றிய காலம்பற்றிய தெளிவு தேவைதானா? விடை மிகத் தேவை. இல்லாமற்போனால், அதில் விளையும் தொல்லை கொஞ்சநஞ்சமன்று. ஒரு நூலை உள்ளவாறு அறியவேண்டுமானால், அது எந்தக் காலத்தில் தோன்றியது என்பதைத் தெரிந்தால் ஒழிய அந்த நூலை உள்ளவாறு அறிய முடியாது; ஒரு கவிஞன் அவன் தோன்றிய காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பர். 'A poet is the product of his time’ ஆகையால், இன்ன காலத்திலே இந்த நூல் தோன்றிற்று என்பதை அறிந்தால் ஒழிய அந்த நூலை உள்ளவாறு அறியவே முடியாது. ஒரு காலத்தே தோன்றிய நூலைக் கொஞ்சம் பின்னர்த் தள்ளி வைத்தோ அல்லது முன்னர்த் தள்ளிவைத்தோ பார்ப்போமேயானால், நாட்டு நிலவரத்திற்கும் ஏட்டு நிலவரத்திற்கும் வேறுபாடு காணப்பெறும். ஆகையால், எந்த ஒரு நூலையும் - அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி, வடமொழியாக இருந்தாலும் சரி, தமிழாக இருந்தாலும் சரி, சீன நூலாக இருந்தாலும் சரி,