பக்கம்:இன்றும் இனியும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 அ.ச. ஞானசம்பந்தன் என்பவைபற்றியும், இந்திர உலகம் போன்ற போக பூமிகள் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. என்றாலும், இங்குக் காணப்பெறும் சமயக் கருத்துகள் இந்நாட்டிற்கே சொந்தமானவை என்பதை மறத்தலாகாது. இமயம் முதல் குமரிவரை அறிந்திருந்த இத் தமிழர் முத்தி விளக்கில் துஞ்சும் பொற் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே (புறம்-2) என்று பாடினாலும் இவர்களுடைய சமயக்கொள்கை பிற நாட்டிலிருந்தோ பிற பகுதிகளிலிருந்தோ கடன் வாங்கியது அன்று. மேலும், சங்க காலச் சமயம் இறையுணர்வை வலியுறுத்தியதுபோலச் சடங்குகள், குறிகள், அடையாளங்கள் என்பவற்றை வலியுறுத்த வில்லை என்பதும் சிந்திக்கத்தக்கது. சமயம் என்பது வாழ்வின் வேறானதாய், வேண்டுமானபொழுது மேற்கொள்வதாய் அமைந்த ஒன்று என்ற கருத்தை அற்றைத் தமிழர் ஏற்கவில்லை என்றே தோன்றுகிறது. தனி மனிதனுடைய மனத்தில் அமைவது சமயம் என்றால், அவனுடைய வாழ்வுக்கு வழிகாட்டுவது சமயம் என்றால் இதில் மாறுபாட்டுக்கும் கருத்து வேற்றுமைக்கும் இடம் ஏது? - இதனால்தான் போலும் இரண்டாம் நூற்றாண் டில் தோன்றிய சிலப்பதிகாரம் எல்லையற்ற சகிப்புத் தன்மையுடன் எல்லாச் சமயங்களைப் பற்றியும் அச் சமயக் கடவுளர் பற்றியும் பேசுகிறது. சிவபெருமான், திருமால், கண்ணன், பலராமன், கொற்றவை, முருகன், அருகதேவன் ஆகிய அனைவரையும் வேறுபாடற்ற நிலையில் பேசுவதுதான் சிலம்பின் தனிச் சிறப்பாகும். இத்தகைய சமய சகிப்புத் தன்மை இரண்டாம் நூற்றாண்டு முடியத் தமிழ்நாட்டில் நிலவி வந்தது