பக்கம்:இன்றும் இனியும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அ.ச. ஞானசம்பந்தன் இனி, துயில் 'அணைமேல் தலைவி கண்வளர் கின்றாள் என்கிறார். அதுவும் ஒரு கருத்தை உட் கொண்டே நிற்கிறது. துயிலணை எவ்வளவு மென்மை உடையதாக இருக்கிறது. புறத்தே வலிய துணியால் மூடப்பெற்றிருப்பினும் அகத்தே மெல்லிய பஞ்சன்றோ புதைந்து கிடக்கின்றது. அப்பஞ்சு தன்மாட்டுத் தலைசாய்த்தார்க்குத் தன்னுடைய இனிய மெல்லிய ஊற்றுணர்ச்சியால் இன்பம் பயக்கின்றது. என்றாலும் என்ன? அத்தகைய தலையணையில் தலைவைத்துக் கண்வளரும் தலைவியின் உள்ளத்தின் மென்மைத் தன்மை சிறிதும் இல்லையே. இறைவனை நினைந்து உருகாத மனம் கல்லினும் கடியதன்றோ? வல்நெஞ்சப் பேதையர்போல் என்றே மணிவாசகரும் கூறுவதைக் காணவேண்டும். எனவே, வீட்டையும் தலையணை யையும் வருணிக்கின்ற முறையில், தலைவியின் அக இருளையும் மனத்திண்மையையும் ஒப்புயர்வற்ற முறையில் இப்பாடல் விளக்கிநிற்கக் காண்கிறோம். இம்முறையைக் கைவிட்டு, வேறு எம் முறையில் தலைவியின் நிலையை, அவளுடைய இருண்ட உள்ளத்தை ஆசிரியர் கூறியிருந்தாலும் அது சிறந்த கவிதையாக ஆகாது. ஆகவேதான், இப் பாடலில் திறனாய்வாளரின் முழு இலக்கணமும் நன்கு அமையக் காண்கிறோம்.