பக்கம்:இன்றும் இனியும்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணத்தின் ஆற்றல் 263 கோடிக்கணக்கான மக்களும் உண்டு. அப்படியானால் இந்த நாட்டின் விடுதலைபற்றி மகாத்மா வருகின்ற வரை யாருமே எண்ணவில்லையா என்ற வினா எழும்? உறுதியாகப் பலரும் இருந்திருப்பர் என்பதே அதற்கு விடை. அவ்வாறானால் விடுதலைபற்றி எண்ணிய அந்தப் பலருக்கும் மகாத்மாவிற்கும் என்ன வேறுபாடு? இருவரும் மனிதர்கள்தாம். இருவரும் எண்ண ஓட்டம் உடையவர்களே! என்றாலும் என்ன? அச் சாதாரண மனிதர்களின் எண்ணங்கள் வலுவற்றுப் போயினமையின் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. அவர்கள் மனத்தில் தோன்றிய எண்ணங்களும் 'பொய்யாய்க் கணவாய் மெல்லப் போய்விட்டன! ஆனால் மகாத்மாவின் எண்ணங்கள் மிக மிக வலுப்பெற்றவை ஆதலின் அந்த எண்ணங் களின் ஆற்றல் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே சரித்து விட்டது. இந்த ஓர் உதாரணமே எண்ணங்களின் ஆற்றலை அறிவிக்கப் போதுமானது. புத்தரும், வள்ளுவரும். பகவான் புத்தர் இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளின் முன்னரே எண்ணத்தின் ஆற்றலை நன்கு அறிந்திருந்தார். எனவேதான் அவருடைய பொன்மொழிகள் எடுத்துக் கூறும் தம்ம பதம் இக் கருத்தை வலியுறுத்திக் கூறுகிறது. மனிதனின் எண்ணங்கள் அழிவில்லாதவை; வலுவானவை. ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் எண்ணங்களே. எனவே மனிதன் தன் எண்ணங்களைத் துய்மை உடையனவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த நூல் கூறுகிறது.