பக்கம்:இன்றும் இனியும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர் வழிபாடு 19 இறைவன் படைப்பினுள் எல்லாம் மிக மேன்மை பொருந்தியதாக உள்ள மனிதனை வணங்குவது மிகவும் ஏற்றது. அதிலும், மனித இனத்துள் உயர்ந்தவராகிய வீரரை வழிபடுவது யாவரும் செய்யத் தககது. போலி நாகரிகம் தோன்றாத பழங்காலத்தில் இத்தகைய உண்மை வீரர்களைப் பெரிதும் மக்கள் வழிபட்டனர். சங்க காலத்தில் பெரும் புலவர்களை அரசர்கள் வழிபட்டமைக்கும், பிற்காலத்தில் ஞான சம்பந்தர் போன்ற சமயகுரவர்களை மக்கள் போற்றிய தற்கும் இதுவே காரணம். இப் பேருண்மையை அறிய இயலாதார் இத்தகைய வீரர்களைக் காலச் சுழலில் தோன்றிய சாதாரண மக்களென்றும், காலக் கூறுபாட்டால் அவர்கள் சில செயல்களைச் செய்துங் கூறியுஞ் சென்றனரென்றும், அதனால் அவர்களைப் போற்றலும் வழிபடலும் அவசியமின்று என்றுங் கூறுவர். ஆனால், காலம் என்றைக்கும் உளதென்றும், காலம் எத்துணை விரும்பி அழைக்கினும் இறைவ னருளின்றி இவ் வீரர் வெளிப்படார் என்றும், இன்றைய நிலையில் இத்தகைய வீரர் ஒருவர் வேண்டு மென்று நாம் எத்துணை விரும்பினும் அவ னருளின்மையால் அவ் வீரர்கள் தோன்றவில்லை யென்றும் கூறி அவர்கள் போதத்தைத் தள்ளி விடுக. இனிப் பொதுவாக உலகினும் சிறப்பாகத் தமிழ் நாட்டினும் வீரர் தோன்றினமைக்குச் சில சான்றுகள் காண்போம். வீரர் என்றவுடன் கேவலம் மிருக பலமுடையாரைக் குறிப்பதாக மட்டும் நினைத்தல் கூடாது என்று முன்னமேயே கூறினோம். சாதாரண மக்கள் நிலைக்கு மேற்பட்டு நிற்பவரெல்லாம் வீரரே,