பக்கம்:இன்றும் இனியும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S புகழ் வேட்டை "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் இந் நல்லுலகத்தைப் பண்டுதொட்டு ஆண்டவர் மூவேந்தர் எனப்படுவர். சேர சோழ பாண்டியர் என்று கூறப்பெறும் இவர்களைப் பற்றிப் பண்டை இலக்கியங்கள் பரக்கப் பேசுகின்றன. இம் மூவரும் சேர்ந்து ஆட்சி புரிந்த இடத்தின் பரப்புத்தான் யாது என்று நினைக்கிறீர்கள்? வடக்கே வேங்கடமலை (தற்பொழுது திருப்பதி என்று கூறும் மலையே), தெற்கே கன்னியாகுமரி, மேற்கும் கிழக்கும் கடல்கள். வடக்கி லிருந்து தெற்கே ஏறக்குறைய 500 மைல்கள். கிழக்கி லிருந்து மேற்கே அகன்ற இடத்தில் 400 மைல், குறுகிய இடத்தில் சில அடிகள் (குமரி முனையில்); இந்த அளவு குறுகிய நிலத்தை ஆட்சி செய்தவர் மூவர். 'மண் திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர், முரசு முழங்கு தானைமூவர் (புறம், 35) என்ற புறப்பாடல் இதற்குச் சான்று. இந்த அளவுடைய நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், இவர்கள் ஒவ்வொருவரும் தத்தமைக் கூறிக் கொள்ளும் பொழுது, பேரரசர்களாகவே (சக்கரவர்த்திகள்) கூறிக் கொண்டனர். இவ்வரசர்கள் ஒரோவழி இதை மறந்திருப்பினும், உழை இருப்போர் அவர்கட்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தனர்.