பக்கம்:இன்றும் இனியும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் (பேராசிரியர் ம.ரா.போ. குருசாமி அவர்கள்) மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார் தமிழ் மொழியைச் சீரிளமைத் திறம் வாய்ந்தது என்று கூறியதோடு, எல்லையறு பரம்பொருள் போல் இருப்பதாகவும் உவமை கூறினார். நேற்றுத் தோன்றி இன்று நலிந்து, நாளை மறையும் பொருளைப் பரம் பொருளோடு இணைதுணையாக்கி உவமை சொல்ல முடியாது. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியதாய் அமைவதே பரம்பொருள் இலக்கணம். உயிரூட்டம் உள்ள எந்த மொழியும் இதே பண்பினைக்கொண்டு இலங்கும். சார்வினுக்கெல்லாம் தகத் தக மாறும்; ஆயின், சென்ற காலத்து வேர் பாய்ச்சிய தொடர்ச்சி இருக்கும். சீரிளமைத் திறம் வாய்ந்த செந்தமிழ் மொழி தொன்மைப் பழமையில் வேர் பாய்ச்சியது; இற்றைச் சமுதாய நிகழ்வுகளிலே கிளைத்துச் செழிப்பது; நாளை வாழ்வின் நம்பிக்கையாய்ப் பூத்துக் காய்த்து முதிர்ந்து க்னிந்த வித்தைக் கொடுப்பது, தளிர் இலையாகும்; இலை சருகாகும்; சருகு உதிரும்; உதிர்ந்த இடத்தில் புதுத் தளிர் குலுங்கும். எனவே, தொல் வரலாற்றுப் புதை பொருளாராய்ச்சியில்தான் தமிழைத் தேட வேண்டும் என்ற அவல நிலை தமிழ் மொழிக்கு இல்லை. பரம்பொருளோடு சரிநிகராகக் கால தத்துவத்தைத் தன்மயமாக்கிய தன்மையுடையது தமிழ்மொழி. பேராசிரியர் அ.ச.ஞா. வின் இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்தபோது, முதலில் எழுந்த வினா