பக்கம்:இன்றும் இனியும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்ந்திருக்கிறதா? 69 காதலைப்பற்றிப் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடினார்கள் என்றால் இதன் கருத்து யாது? காதல் என்ற ஒரே சுவையை வைத்துக்கொண்டு அலுப்புத் தட்டாத முறையில், சுவை குன்றாத முறையில், இத்தனை ஆயிரம் பாடல்கள் தோன்றின என்றால் ஆழ்ந்து செல்லும் - நுணுகிச் செல்லும் இயல்பை அவர்கள் மேற்கொண்டார்கள் என்று கூறுவதில் தவறு இல்லை. காதல், வீரம், கொடை என்ற இவற்றோடு பழம் பாடல்களின் பொருட்பரப்பு நின்றுவிடுகிறது. ஆதலால்தான் பொருட் சுருக்கம் கருதி, ஆழ்ந்து செல்லும் தன்மை அப்பாடல்களில் காணப்படுகிறது. இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் ஆழ்ந்தும் விரிந்தும் செல்லுகின்ற இயல்பைக் காண்கின்றோம். தேவாரம் முதல் பிரபந்தம் ஈறாக உள்ள பக்திப் பாடல்களில் பேசப்படும் பொருள் பக்தி யென்ற ஒன்றேயொன்றுதான். என்றாலும் பன்னி ரண்டு ஆழ்வார்களும் நான்கு நாயன்மார்களும் ஆகப் பதினாறுபேர் பல ஆயிரம் பாடல்களை இத் துறையில் பாடியுள்ளார்கள் என்றால் இவர்கள் பாடல்களில் சங்கப் பாடல்களைப்போல ஆழ்ந்து செல்லும் இயல்பு இருக்கிறது என்று கூறத் தேவையில்லை. நம்மாழ்வார், ஞானசம்பந்தர் போன்றவர்கள் ஒரே பக்திச் சுவையை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்கள் என்றால், அப்பாடல்களை ஒரு சிறிதும் அலுப்புத் தட்டாமல் பலமுறையும் படித்து இன்புறலாம் என்றால், அதன் காரணம் யாது? இவ்வொரு சுவையில் ஏற்படுகின்ற பல்வேறு அனுபவங்களையும் நுணுகி நுணுகிச் சென்று கண்டு