பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சுந்தர சண்முகனார்


என்றும் கூறவில்லை. தமிழ் நாட்டின் வடக்கு எல்லை வேங்கடம் - தெற்கு எல்லை குமரி என நாட்டிற்கு எல்லைகள் கூறப்பட்டுள்ளன. வடவேங்கடம் என்பதில் உள்ள ‘வட’ என்பது வேங்கடத்திற்கு அடைமொழி. தென்குமரி என்பதிலுள்ள ‘தென்’ என்பது குமரிக்கு அடைமொழி. இவை எல்லைகளைக் குறிக்கும் அடை மொழிகளாகும். வடக்கும் தெற்கும் ஒன்றுக்கு ஒன்று மாற்றுதானே.

9. இடப்பெயர்கள்

இந்த அடிப்படையுடன் தென் புதுவைக்கு வருவோம். எந்த இடம் தொடர்பான பெயருக்கு முன்னும் உள்ள ‘தென்’ என்பது தெற்கு என்னும் பொருளையே தருவதை அறியலாம். சில காட்டுகள்;-

தென் காசி, தென் கயிலாயம், தென் கோடு, தென் பரதம், தென் பல்லி, தென் பாண்டி, தென்பார், தென் பாரதம், தென்பால், தென்பாலி, தென்புலம், தென் புலத்தார், தென் மலை, தென் மதுரை, தென்முனை, தென் வரை, தென் திசை, தென்னகர், தென்னம் பொருப்பு, தென்னுலகு, தெனாது, தென்னவன், தென் கிழக்கு, தென் மேற்கு, தென் மூலை, தென் பக்கம், தென் கோடி, தென் கடல், தென்னார்க்காடு, தென் அருணை முதலியனவாம்.

மேலே, இடப்பெயருக்கு முன் தென் என்பது தெற்கு என்னும் பொருள் தந்து நிற்பதைக் காணலாம். இந்த முறையில் நோக்குங்கால் தென் புதுவை என்பதற்குத் தெற்கே உள்ள புதுவை என்றே பொருள் கொள்ளல் வேண்டும்.

பாரதியார் கூறியுள்ள தென் புதுவை என்னும் தொடருக்கு இப்பொருள் கூற, செங்கற்பட்டு மாவட்டப் புதுச்சேரியே துணை செய்ய முடியும்.