பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14. அமைதிச் சுவை

சில காட்சிகளின் நிலை

ஓரிடத்தில் ஒரு சில காட்சிகள் உள்ளன. அவற்றைக் கண்டவன் சொன்ன கருத்துகள் சில வருமாறு:

“யாரும் கொண்டு செல்லக்கூடிய அமைதியற்ற பெண் உள்ளாள்; குழந்தை அலறுகின்றது. விருப்பம் இல்லாத கன்னிப் பெண்ணைக் காளை ஒருவன் காம வெறி பிடித்துத் தொடர்கிறான்; அவன் தொடாதபடி அப்பெண் போராடித் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

காதால் கேட்கப்படும் இசையை, ஓர் அழகிய இளைஞன் ஒரு மரத்தின் கீழே இருந்து கொண்டு இசைக்கிறான். அவன் இசைப்பாடலைத் தொடர்ந்து எழுப்ப முடியவில்லை; நிறுத்தி விடுகிறான். அம்மரத்தின் இலைகள் உதிர்கின்றன.

துணிவுள்ள ஓர் இளைஞன் தான் விரும்பிய பெண்ணை நெருங்கி முத்தமிடுகிறான். அவள் மறைந்து கொண்டாள்; அதனால் அவளை அவன் மேலும் காதலிக்க முடியவில்லை. பல்லாண்டு கழிந்ததும் அவள் அகவை முதிர்ந்து அழகற்றவளாகிவிட்டாள்.

இன்பம் ஊட்டிய மரக்கிளைகள் இலைகளை உதிர்த்து விட்டன; இளவேனில் காலச் சூழ்நிலைக்கு வழியனுப்பு விழாவும் (பிரிவு உபசாரமும்) நடத்தி விட்டன. இன்னியங்கள் இசைப்பவர்கள் களைப்பினால் இசையை நிறுத்தி விட்டார்கள். அவர்களின் இசை கேட்டுக் கேட்டுப் பழமையாகி விட்டது. காதலர்கள் சிலர், இளமை மாறிவிட்டதால், காதல் சுவையைத் தொடர்ந்து நுகர முடியாதபடித் தெவிட்டல் உண்டாகிவிட்டது.”