பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

சுந்தர சண்முகனார்


இருப்பது அரிது. மெய்யுணர்வினர் அருளாளர்கள்-முற்றத் துறந்த முனிவர்கள் - உயர்ந்த பண்பாளர்கள் ஆகியோரே இவ்வாறு என்றும் நிலை மாறாது அமைதியான ஒரே நிலையில் இருக்க முடியும். இந்த அமைதி நிலைக்கு-இந்த ஒரே மாதிரியான நிலைக்கு விளக்கம் தருவதற்கு ஒவியங்களே உவமையாக இருந்து உதவி செய்யும்.

ஜான் கீட்சு

இதை அறிவிக்கவே, ஜான் கீட்சு (John Keats) என்னும் ஆங்கில புலவர் இயற்றிய “Ode on A Greacian Urn” என்னும் தலைப்புடைய பாடல் பகுதிகள் பொருளுடன் மேலே தரப்பட்டுள்ளன.

தாமரை மலர் தடாகத்தில் மலர்ந்திருக்கும். அது ஆடி அசைந்து கொண்டிருக்கும். நேரம் ஆக ஆக நிறம் மாறி இதழ் சுருங்கி வதங்கிப் பொலிவிழந்து குவியவும் செய்யும். பறித்துக் கொண்டு வந்து கையிலோ வேறிடத்திலோ வைத்திருக்கும் தாமரை மலரும் நேரம் ஆக ஆக நிலை மாறிப் பொலிவு இழக்கும். ஆனால் ஓவியத்தில் வரையப்பட்டுள்ள தாமரை மலரோ நிலை மாறாமல் என்றும் குவியாமல் மலர்ச்சியுடனேயே பொலிவு பெற்றுத் திகழும்.

தாமரை முகம்

மக்களின் மலர்ந்த முகத்திற்குத் தாமரை மலரை உவமையாகக் கூறுதல் மரபு. மக்களின் முகம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. மக்களுள் மிக உயர்ந்தவர்களின்-மக்கள் தன்மைக்கு அப்பாற்பட்ட மேல் நிலையில் உள்ளவர்களின் முகமோ, இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே மாதிரியாயிருக்கும். அதாவது, ஓவியத்தில் உள்ள தாமரை மலரேபோல் ஒரே நிலையில் இருக்கும். இதற்கு ஏதாவது ஓர் எடுத்துக் காட்டு கிடைக்குமா? காண்பாம்: