பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

9


காகவும் எழுதப்பட்டதாதலின், இந்நூலுக்கு ‘இயல் தமிழ் இன்பம்’ என்னும் பெயர் சூட்டப் பெற்றுள்ளது.

அடியேனது இந்த நூலில் ஆய்வுக் கருத்துகள் சிலவும் எண்ணத்தைக் கிளறும் புதிய கருத்துகள் சிலவும் உள்ளன. அனைத்தையும் அறிஞர்களின் - தமிழ் அன்பர்களின் மதிப்பீட்டிற்கு விட்டு விடுகிறேன். நன்றி வணக்கம்.


2. இன்சொல் இயம்பல்

இன்சொல் என்பது மிகவும் விலை மலிவான-இல்லையில்லை-விலையே இல்லாத ஓர் அருட்கொடைப் பொருளாகும். இந்த மலிவான பொருளை மக்களுள் பெரும்பாலார் பெற்றிராதிருப்பது மிகவும் வியப்பாயுள்ளது. மலிவான பொருளுக்கு மதிப்பு இல்லை என்பது இவர்தம் எண்ணம் போலும்.

திருமூலர் மக்களைப் பார்த்துச் சொல்கிறார்: கடவுளுக்கு ஒரு பச்சிலை கொண்டுவந்து சாத்தலாமே. நமக்குப் பால் தந்து காக்கும் ஆவிற்கு ஒருவாய்ப் புல்லாவது கொடுக்கலாமே என்கிறார். நாங்கள் பச்சிலையும் வாய்ப்புல்லும் தேடிக்கொண்டு வந்து தருவது இயலாத செயல்-எங்களுக்கு இருக்கும் வேலையிலே இவற்றைத் தேடுவது எப்படி என்ற பதில் வந்ததுபோல் தோன்றிற்று. அடுத்துத் திருமூலர் தெரிவிக்கிறார்; இரவலர்க்கு-ஏழையர்க்கு ஒரு கைப்பிடி உணவாவது இடலாமே என்கிறார். யாங்கள் உண்பதற்கு முன்-சமையல் முடிவதற்கு முன் எவ்வாறு இடுவது என்ற பதில் வந்ததுபோல் தெரிந்தது. உண்பதற்கு முன் இடமுடியாவிடினும், உண்ட பிறகாவது இடலாமே என்கிறார். உண்டபின் தீர்ந்துபோய் விட்டதே-எவ்வாறு