பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சுந்தர சண்முகனார்


கொடுப்பது என்ற பதில் வந்தது போலும். அங்ஙனமெனில், உண்டு கொண்டிருக்கும்போதே, வந்து கேட்பவர்க்கு-ஒரு படி சோறு தரச் சொல்லவில்லை-ஒரு பிடி சோறாயினும் தர முடியுமே என்றார். அதற்கும் நல்ல பதில் எதிர்பார்க்க முடியவில்லை போலும். முடிவாக-இறுதியாகக் கூறுகிறார். பிறர்க்கு எந்த உதவியும் செய்ய இயலாவிடினும், இனிய சொல்லாலாவது பிறரைக் குளிரச் செய்யலாமே என்கிறார். திருமந்திரம் என்னும் தமது நூலில் ஒரு பாடலில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்,

“யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே” (252)

என்பது அவரது பாடல். எந்த உதவியும் செய்ய முடியாதவர்க்கு, பிறர்க்கு இன் சொல்லாவது இயம்பக்கூடிய இந்த உதவியை அறிமுகப்படுத்தி யுள்ளார். விலை கொடுத்து வாங்க வேண்டாத மலிவான பொருளை மக்கட்குப் பரிந்துரைத் துள்ளார் திருமூலர்.

உலகியலில் மக்களிடையே இன்சொல்லுக்கு எதிரான வன்சொல்லே பேரரசு புரிவதால், அறிஞர்கள் பலரும் மலிவான இன்சொல்லை வற்புறுத்தியுள்ளனர். உலகத்தை இன் சொல்லால் தவிர வன் சொல்லால் மகிழ வைக்க முடியாதென நல்லாற்றூர்ச் சிவப்பிரகாச அடிகளார் நவின்றுள்ளார்.

“இன் சொலால் அன்றி இருநீர் வியனுலகம்

வன் சொலால் என்றும் மகிழாதே” (18)

என்பது அவரது நன்னெறி நூலின் ஒருபாடல் பகுதி. இன் சொல் இயம்பாவிடினும், நாயை அவிழ்த்து விட்டு விரட்டாமல் இருந்தால் போதும்-என்று ஒருவர் சொல்வது