பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

சுந்தர சண்முகனார்


ஆசானின் உரை அன்புரையாக இருக்க வேண்டும் என்னும் கருத்து அடங்கியுள்ளமை காண்க.

எனவே, ஆசிரியர்கள் கடனுக்கு வேலை செய்யாமல் உண்மையாகவே பாடுபட்டு உழைக்க வேண்டும். ஆசிரியர்கள் சிலர் எப்போது மணியடிக்கும் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். “மாட்டை மேய்த்தான், கோலைப் போட்டான்” என்பது இன்னோர்க்கேப் பொருந்தும். சில சமயங்களில், தலைமை (அதிகாரி) அலுவலாளர்க்கு அஞ்சி அப்படியும் இப்படியுமாக அசைவதும் உண்டு. இவ்வித ஆசிரியர்களால் மாணவ உலகம் சிறிதும் நன்மை பெறாது. உணவுக் கடையில் பணத்திற்கு உணவு போடும் சிலர்போல் கல்வி கற்பிக்கக் கூடாது; பெற்ற தாய் பிள்ளைக்கு உணவு அளிப்பதுபோல் பரிவுடன் - அன்புடன் கற்பிக்க வேண்டும். இனி மாணவர் பக்கம் சிறிது கவனத்தைத் திருப்புவோம்:

கற்கும் முறை

பிள்ளைகளின் குறும்பு

ஆசிரியரிடம் கல்வி பயிலும் பிள்ளைகள் கற்கும் முறையினையும் நன்குணர வேண்டும். யாருக்கோ வந்த விருந்தென மேலோடு இருந்துவிடக் கூடாது. பிள்ளைகள் சிலர், மாணவரின் நன்மைக்காகப் பள்ளிக்கூடம் நடக்கின்றது என்பதை அறவே மறந்து விடுகின்றனர்; மாணவராலேயே பள்ளிக்கூடத்தினர் பிழைப்பதாக எண்ணுகின்றனர்; எண்ணி இடக்கும் செய்கின்றனர்; சில சமயங்களில் பள்ளிக்கூடத்தை ஒரு நாடகக் கொட்டகையாகவே கருதி விடுகின்றனர்; வகுப்பை நாடக மேடையாகவே கருதி விடுகின்றனர்; ஆசிரியர்களை நடிகர்களாகவும் எண்ணுகின்றனர்; நாடகக் கொட்டகையில் கலவரம் செய்யும் சில குறும்பர்களைப்