பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

147


கொண்டவன் மிக்க ஆர்வத்தோடு தண்ணீர் பருகுவது போல, ஆசிரியர் சொல்லும் பாடமாகிய உணவைச் செவியேவாயாகவும், நெஞ்சே வயிறாகவும் கொண்டு கேட்டு உண்ண வேண்டும். கேட்ட பாடங்களை மறக்க விடாமல் உள்ளத்தில் பதியவைக்க வேண்டும். ஆசிரியர் ‘போ’ என விடையளித்த பின்பே வீட்டுக்குப் புறப்பட வேண்டும். மாணவர்களின் தேவையறிந்து கல்வியுணவை ஊட்ட வேண்டும். இக்கருத்துக்களை, நன்னூலிலுள்ள,

“கோடல் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று, வழிபடல் முனியான்,
குணத்தொடு பழகி, யவன் குறிப்பிற் சார்ந்து,
இருவென இருந்து, சொல்லெனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்,
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்,
செவிவாய் ஆக நெஞ்சுகளன் ஆகக்
கேட்டவை கேட்டு, அவைவிடாது உளத்தமைத்துப்,
போவெனப் போதல், என்மனார் புலவர்”

என்னும் நூற்பாவால் நன்குணரலாம். இவற்றையெல்லாம் பழங்கால (கர்நாடக) விதிகள் என்று தள்ளிவிட முடியாது. இக்காலத்திலும் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறை விதிகள் பெரும்பாலன இவற்றைப் போன்றே பள்ளிக்கூட அறிக்கைகளில் வெளியிடப்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். ஆதலின் மாணவர்கள் இம்முறையில் பாடங்கேட்டுப் பயன் பெறுவார்களாக, இவ்விதம் கற்கும் கல்வியே விரைவிலும் வேரூன்றிப் பதியும்.

பின்னின்றும் கற்க

பொதுவாக உலகத்தில் மானத்தோடு வாழ விரும்புபவர்கள் ஒருவர்க்குப் பின்னின்று கையேந்த மாட்டார்கள்; அந்நிலைக்குப் பெரிதும் நாணுவார்கள். ஆனால் கல்வியைப்