பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

சுந்தர சண்முகனார்


காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன் ‘பிரேயர்’ (Prayer) என்னும் பெயரில் கடவுள் வழிபாடு நடத்தப்படுகிறது. இதைத்தான், நன்னூல், ‘தெய்வம் வாழ்த்தி’ என்னும் தொடரால் சுட்டுகிறது. மாணவன் உள்ளத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டும்; அவன் நிலைமையறிந்து கற்பிக்க வேண்டும்; திணித்தல் முறை கூடாது என்று இக்காலப் பயிற்றுமுறை கூறுகின்றது. அதையே ‘கொள்வோன் கொள் வகையறிந்து அவன் உளங்கொள நூல் கொடுத்தல்’ என்று நன்னூலும் வற்புறுத்துகின்றது. மேலும் ஆசிரியருக்குத் தான் சொல்லிக் கொடுக்கப் போகும் பாடத்தில் தெளிவும் திறமையும் இருக்க வேண்டும் என்று இக்காலப் பயிற்று முறை வல்லுநர்கள் கூறுவதைக் “கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும்” இருக்க வேண்டும் என்று நன்னூலும் ஏற்றுக் கொள்கின்றது; மேலும் ‘ஆசிரியன் விரையான் வெகுளான், விரும்பி முக மலர்ந்து’ பாடஞ் சொல்ல வேண்டுமென்றும், ‘நிறை கோலைப்போல் நடுவு நிலைமையும், மலரைப்போல் முக மலர்ச்சியும்’ உடையவனாக இருக்க வேண்டும் என்றும் நன்னூல் கூறுகின்றது. இவற்றைக் காட்டிலும் என்ன பயிற்று முறை இன்னும் வேண்டிக் கிடக்கின்றது?

எனவே, இக்காலத்தில் ‘புதியவை’ என்னும் பெயரால் அறிமுகப் படுத்தப்படும் பயிற்று முறைகள் பலவற்றை, அக்காலத்து அன்பு ஆசான்களும் அறிந்திருந்தனர் - நடைமுறையில் கடைப்பிடித்தும் வந்தனர் - என்பது தெளிவு. எந்தக் காலத்திலும் சரி - ஆசான் கற்பிக்கும் உரை, அன்பை அடித்தளமாகக் கொண்டு அதன்மேல் எழுப்பப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.