பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



20. மெய்ம்மயக்கம்

மெய்ம்மயக்கம்

1.1. மெய்ம்மயக்கம் பற்றித் தொல்காப்பியரும் நன்னூலாரும் கூறியிருப்பனவற்றையும் உரையாசிரியர்களின் உரை விளக்கங்களையும் படித்துப் பார்த்த எனக்கு, மெய்ம்மயக்கத்துடன் மன மயக்கமும் ஏற்பட்டுவிட்டது. காரணம், வழக்கம்போல், உரையாசிரியர்கள் ஒருவரோடொருவர் ‘சண்டை, போட்டுக் கொண்டிருப்பதுதான். நச்சினார்க்கினியர் பிறரை மறுக்கின்றார்; பிறர் இவரை மறுக்கின்றனர்.

1.2. இடைநிலை மயக்கம்

மொழியிலக்கண நூலில், மெய்ம்மயக்கம் என்ற ஒன்றைப்பற்றி எழுதித்தான் தீர வேண்டுமா என்ன? இது அவ்வளவு இன்றியமையாததா என்று சிறிது எண்ணிப் பார்த்தேன். சொற்களின் இடையிலே எந்த எந்த மெய் எழுத்துகள் இயைந்து இணைந்து வருகின்றன. எந்த எந்த மெய்யெழுத்துகள் இணையா - என்று கூறுவதுதான் மெய்ம்மயக்கம் என்பது. எது எது எப்படி எப்படி இருக்க வேண்டும் என நீதி நூல்கள் போல் கட்டளைகளை இலக்கண நூல்கள் இடாவிடினும், வரலாற்று நூல்கள் போல், எப்படி எப்படி உள்ளன எனக் கூறியிருப்பதைக் கொண்டு, மொழியை இப்படி இப்படிக் கையாளவேண்டும் எனக் குறிப்பாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. எல்லாம் இலக்கியம் கண்டதற்கு இலக்கணமாக உள்ளன.

சொற்கட்கு இடையில் உள்ள எழுத்துகளின் இயைபுகளை மயக்கங்களைக் கூறுகின்ற இப்பகுதிக்கு ‘இடை