பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

சுந்தர சண்முகனார்


இசுடாலின், ரூசுவெல்ட்டு, புழ்சு என்று குறிப்பிடலாம். ஆனால் இதில் சிக்கல் உள்ளது. ‘ஸ்’ என்பதோ அல்லது எந்தத் தனிமெய்யெழுத்துமே தமிழில் மொழிக்கு முதலில் வராது. ரூஸ்வெல்ட் என்பதில் ‘ரூ’ மொழிக்கு முதலிலும் ‘ட்’ மொழிக்கு இறுதியிலும் வராது. அதனால் கம்பர் செப்பனிட்டுத் தந்துள்ள பாதையில் வழிநடக்க வேண்டும்.

அறிவியல் வளர்ந்து வரும் இந்தக் காலத்தில், இந்தச் செப்பிடுவித்தையெல்லாம் முற்றிலும் ஒத்து வராது. எனவே, தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் ஸ், ஷ, ஜ, ஹ, க்ஷ, fa போன்ற எழுத்துகட்கு இணையாக - அதே ஒலிப்பில் புதிய வரிவடிவங்களைப் படைத்துக் கொள்ளலாம். மொழிக்கு முதலிலும் இடையிலும், இறுதியிலும் வரும் எழுத்துகள் - வரா எழுத்துகள் என்னும் வழியில் நின்று ஓரளவு விலக்கு அளிக்க வேண்டும்.

சமசுகிருத மொழியில் க, ச, ட, த, ப,- என்னும் ஐந்திலும் நான்கு நான்கு எழுத்துகள் உள்ளன. இவற்றைத் தமிழ் தவிர்த்த இந்திய மொழிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் (தண்டையான) தலையெழுத்து தமிழுக்கு-தமிழர்க்கு வேண்டியதில்லை. தமிழ்ச் சொற்கள் இனிமையாக ஒலிக்கக் கூடியவை.

சுருங்கக்கூறின், ஸ், ஷ, ஜ, ஹ, க்ஷ, fa - இன்ன சில எழுத்துகட்கு எப்படியாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது நம் கடமையாகும். மற்றும் மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரக்கூடாத எழுத்துகளும் வரலாம் என விதிவிலக்கு அளிக்கலாம் என்பதை நன்னூலாரே தொடங்கி வைத்து நமக்குக் கற்றுத் தந்து சென்றுள்ளார். அஃதாவது:-

7. விதிவிலக்கு

“தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும்
இம்முறை மாறியும் இயலும் என்ப” (66)