பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

சுந்தர சண்முகனார்


 நிகழ்கால இடை நிலைகள்

உறுப்பிலக்கணம் பற்றித் தொல்காப்பியர் தனியே கூறவில்லை; முதல் நிலை (பகுதி), இறுதி நிலை (விகுதி) என்னும் இரண்டையும் பற்றி ஆங்காங்குக் கூறியுள்ளார்; இடைநிலை பற்றி அவர் ஒன்றும் கூறிற்றிலர். ‘புதியன புகுதல்’ என்ற முறையில், நன்னூலார் கூறியுள்ளார். மக்களின் அக்கால நடைமுறைப் பேச்சு வழக்கையொட்டி இவ்வுறுப்புகள் நன்னூலில் கூறப்பட்டுள்ளன. நிகழ்காலம் காட்டும் இடைநிலைகளாகக் கிறு-கின்று-ஆநின்று என்னும் மூன்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

“ஆநின்று கின்று கிறு மூவிடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை” (143)

என்பது நன்னூல்பா. இந்த நிகழ்கால இடைநிலைகளைத் தொல்காப்பியர் கூறாதது மட்டுமன்று; சங்க இலக்கியங்களிலும் இவை இடம்பெறவில்லை. ஆனால், இடைக்கால இலக்கியங்களில் இவை இடம்பெறத் தொடங்கிவிட்டன.

“மின்னொளிர் கானம் இன்றே
போகின்றேன் விடையும் கொண்டேன்”

என்னும் கம்பராமாயணத்தின் (அயோத்தியா காண்டம் - கைகேயி சூழ்வினைப் படலம்) பாடல் பகுதியில், ‘போகின்றேன்’ எனக் ‘கின்று’ என்னும் இடைநிலை ஆளப்பட்டுள்ளது. ‘போகிறேன்’ என்பதைக்காட்டிலும் ‘போகின்றேன்’ என்பது அழுத்தம் திருத்தத்தை அறிவிக்கிறது. கிறு, கின்று என்பனவே மிகுதியாக இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. ‘ஆநின்று’ என்பது அரிதாகவே உள்ளது. இம் மூன்றுமே நிகழ்காலம் காட்டினும், கிறு-கின்று என்பவற்றிற்கும் ஆநின்று என்பதற்கும் வேற்றுமை உண்டு. இதன் விளக்கம் வருமாறு: