பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

183


(மாமா வேலை) என்னும் பொருளும் சில பகுதிகளில் உண்டாதலானும் இச் சொல்லுக்குப் பதில் ‘ஒன்பது’ என்னும் சொல்லைப் பயன்படுத்தினர். இதற்கு எழுத்துச் சான்று காட்டின் விரியு மாதலின் விடுப்பாம். ஒன்பது என்னும் சொல் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வழக்கில் வந்து விட்டது.

ஒன்பது என்பதற்கு, ஒன்று குறைந்த பத்து அதாவது பத்தில் ஒரு பகுதி குறைந்தது என்பது பொருள். பத்துக்கு முன்னால் ஒன்று போட்டால் ஒன்பது என்னும் பொருள் கிடைப்பதை இலத்தீன் எண்ணில் (Roman Number) காணலாம். X என்பது இலத்தீனில் பத்து. அதற்கு முன்னால் ஒன்று போட்டு IX என்று எழுதின் ஒன்பது என்பது கிடைக்கும். 19 என்பதைத் தமிழில் பத்தொன்பது என்றும், ஆங்கிலத்தில் nineteen என்றும் ஒலிக்கிறோம். இலத்தீனில் XIX என்று அமைத்தால் X + IX = (10 + 9 =) 19 ஆகும். இலத்தீன் மொழியில் இதனை ஒன்று குறைந்த இருபது - அதாவது - undeviginti என்கின்றனர். இலத்தீனில், Viginti என்றால் இருபது; de என்றால் from - அதிலிருந்து கழிவது; un என்றால் ஒன்று. எனவே, ஒன்று குறைந்த இருபது (20-1=19) என்னும் பொருளில் 19=XIX ஒலிக்கப்படுகிறது.

தமிழ் எண்கள், க(1), உ(2), ரு(5), எ(7), அ(8), வ(1/4), ப(1/20) என எழுத்துருவங்களால் குறிக்கப்படுதல் போலவே, இலத்தீனிலும் V(5), X(10) என எண்கள் எழுத்தால் குறிக்கப்படுகின்றன. இவற்றிற்கு முன்னால் ஒன்று சேர்க்கின், IV = 4, 1X = 9 என்பன கிடைக்கும். இந்த எண் அமைப்பு ஒற்றுமையின் துணை கொண்டு தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவற்றின் புணர்ச்சி விதிக்குத் தீர்வு காணலாம்.