பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

209


இரட்டாததற்கு உரிய காரணம் என்ன? கல்லடி என்பதில், முதலெழுத்தில் ஒலி முயற்சி மிகுதியாகச் செலவழிக்கப்படவில்லை; அதனால், இரண்டாவது எழுத்தில் ஒலி முயற்சி அழுத்தம் பெறுகிறது; அதனால் ‘ல்’ இரட்டிக்கிறது. ஆனால் கால் + அடி என்பதில் முதலெழுத்தாகிய ‘கா’ என்னும் நெட்டெழுத்தின் ஒலிமுயற்சி மிகுதியாகச் செலவானதால், அடுத்த எழுத்தில் ஒலி முயற்சி குறைகிறது. அதனால் ‘ல்’ இரட்டாமல் கால் + அடி = காலடி என்றே ஒலிக்கப் படுகிறது. கடல் + ஓசை கடலோசை, அகலம் + ஆயிற்று = அகலமாயிற்று - எனத் தனிக் குறிலின் பக்கத்தில் இல்லாமல், தனி நெடிலுக்குப் பக்கத்திலும், ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் கொண்ட சொற்களின் பக்கத்திலும் உயிரை முதலாகக் கொண்ட வருமொழி வரின், நிலை மொழி ஈற்று மெய்யோடு வருமொழி முதலில் உள்ள உயிர் இணைந்து உயிர்மெய் எழுத்தாக ஒலிக்கும்.

பிரெஞ்சு மொழியிலும் இந்த அமைப்பு உண்டு. Comment allez vous என்னும் பிரெஞ்சுத் தொடரின் ஆங்கிலப் பெயர்ப்பு How are you என்பதாகும். Comment How, allez = are, Vous = you. நீர் எப்படி இருக்கிறீர்? என்பது இதன் பொருள். Comment என்பதைத் தனியாக ஒலிக்கும்போது ‘கொம்மான்’ என்றே ஒலிக்கவேண்டும். இறுதி t ஒலி பெறா ஊமை (Silent) எழுத்து. இந்த t என்பதே, Comment allez vous என்னும் தொடரில் வரும்போது ‘த்’ என்னும் தகர ஒலி பெறுகிறது. வருமொழியில் allez என a என்னும் உயிர் முதல் மொழி இருப்பதால், கொம்மான் தலே வு (Commen ta lez vous) என்று ஒலிக்கப் படுகிறது. (Comment = கொம்மான், allez = அலே, vous = வு. ஆங்கிலத்தில் ‘டி’ என்னும் டகரஒலி பெறும் t என்பது, பிரெஞ்சில் ‘தே’ எனத் தகர ஒலி பெற்று ஒலிக்கப்படும்).