பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

சுந்தர சண்முகனார்


புதிய தமிழாக ஆக்குவதாகக் கொள்ளலாகாது. ஒரு விட்டில் முன்னமேயே இருக்கும் பொருள்களோடு, மேலும் சில பொருள்களை வாங்கி வைத்து, வீட்டு வாழ்க்கையை அழகுடையதாகவும் வளமுடையதாகவும் ஆக்குவது போன்றதே இது. பழைய வீட்டை இடித்துப் புது வீடு கட்டுவது போன்றது அன்று இது.

2. விகுதிப் புணர்ச்சி

மேலே, இதுவரையும், சொல்லோடு சொல்புணரும் சொல் புணர்ச்சிகள் சில சொல்லப்பட்டன. இனி, சொல்லோடு இறுதி நிலை (விகுதி) புணரும் புணர்ச்சி விதிகள் பற்றிச் சில காண்பாம்:-

2-1 கள் விகுதி

கருத்து, குறிப்பு என்னும் ஒருமையுடன் ‘கள்’ என்னும் பன்மை விகுதி சேரின், இடையிலே ‘க்’ மிகுந்து கருத்துக்கள், குறிப்புக்கள் எனச் சிலர் எழுதுகின்றனர். அதாவது, வன்றொடர்க் குற்றியலுகரத்தில் வலி மிகும் என்ற அடிப்படையில் இவ்வாறு எழுதுகின்றனர். யானும் முன்பெல்லாம் இவ்வாறே எழுதினேன். இப்போது ‘க்’ மிகுக்காமல், கருத்துகள் - குறிப்புகள் என்றே எழுதுகிறேன்.

வன்றொடரின் முன் ஒரு சொல் வருமொழியாக வந்தாலேயே ஒற்று மிகவேண்டும்; விகுதி சேர்ந்தால் மிக வேண்டா - என்பது சிலரின் கருத்து. கள் என்பதும் பன்மைப் பொருள் தரும் ஒரு சொல்லேயாயினும், விளக்கு - முடுக்கு என்பவற்றோடு கள் சேர்த்து விளக்குக்கள் - முடுக்குக்கள் என்று சொல்வது, இயற்கையாயின்றி என்னவோபோல் - செயற்கையாய்த் தெரிகிறது. விளக்குகள் - முடுக்குகள் என்று சொல்வதே இயற்கையாய் - அழகாய் இருக்கிறது. இதை ஒத்துக்கொள்ள முடியாது - க் மிக்கே தீரவேண்டும்