பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

சுந்தர சண்முகனார்


கிழித்தது போதாதா? இன்னும் எத்தனை ஆண்டு காலம் என் தலைமேல் போட்டு வைக்கப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை; இந்தப் பாழாய்ப்போன சாவு எப்போது வருமோ எனப் புலம்புகிறாள். ‘முக்காலுக்கு ஏகாமுன்’ என்ற காள மேகத்தின் தனிப் பாடலுக்கு மாறாக, மூன்றாவது காலாகிய கோலின் துணைகொண்டே இரண்டு கால்களையும் இயங்கச் செய்கிறாள். எட்டி எட்டி அடி எடுத்து வைக்க வில்லை; அங்குலம்-அங்குலமாக நகர்கிறாள். உணவு இல்லாத பசி ஒரு புறம் வாட்டுகின்றது. தலைமயிர் வெள்ளை நூல் கற்றையை விரித்துப் போட்டாற்போல் இருக்கிறது. கண் தெரிந்தாலும் நடையில் சிறிதாவது முன்னேற்றம் இருக்கலாம்; கண்ணும் தெரியாது. கால்களின் வேலைக்கு உதவும் கோலே கண்களின் வேலைக்கும் உதவுகிறது. அதாவது, கோலே காலாக, கோலே கண்ணாகக் கொண்டு முற்றம் வரைக்குங் கூடப்போக முடியாதவளாக உள்ளாள். முதுமையால் ஏற்பட்ட தாழ்வு இது.

இவள்தான் இப்படியெனில், இவளுடைய மருமகள் பேரப் பிள்ளைகள் உட்பட்ட இவளது குடும்பத்தின் நிலை இன்னும் கொடிது. குழந்தைக்குப் பிற உணவுகளிலும் தாய்ப்பால் உணவே மிகவும் இன்றியமையாதது என்று செயற்படுத்தி வாழ்ந்த பழங்காலம் அது. தாய்ப்பால் குடிக்கும் பருவத்தில் போதிய தாய்ப்பால் கிடைக்கா விட்டாலேயே பிற உணவுப் பொருள்களை நாடுதல் மரபு. இந்த வீட்டுக் குழந்தைகட்கோ, வேறு உணவுப் பொருள் என்பது அறியாத ஒன்றாகும். எனவே, அவை தாய்ப்பாலையே நம்பித் தாயின் முலைகளிலிருந்து பால் குடிக்க வில்லை - பால் வந்தால் அல்லவா குடிக்கலாம் - பால் இருந்தால் அல்லவா வரும். எனவே, பால் வருமா எனத் தாயின் முலைகளைப் பிசைந்து பார்க்கின்றனர்; பால் வரவில்லை; எனவே, முலையை மென்று தின்பதுபோல்