பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

சுந்தர சண்முகனார்


உப்பு போடலாம். உப்புக்கே வழியில்லை எனில், மோருக்கு எங்கே போவது? வெற்றுக்கீரைத் தண்ணீரே எல்லாருக்கும் உணவாகின்றது. உயர்ந்த உணவு மறக்கப்பட்டது.

ஆள்பாதி - ஆடைபாதி என்பார்கள். அவளது உடையோ அழுக்கேறிய உடை, அஃதும் உடம்பு முழுவதையும் மறைக்கமுடியாத அவை, குறை ஆடை, இக்காலத்தில் உடைவளம் இருந்தும், புதுநாகரிகக் கொடுமையின் பேரால் சிலர் அரைகுறையாய் உள்ளார்களே - அவள் நிலை இன்னதன்று. இல்லாத ஏழமையால் இந்த நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், எல்லாரையும் காப்பதாகக் கூறும் அவள் போற்றவா செய்வாள்? மாறாக, (பாழுந் தெய்வமே! உன் தலையில் ஓர் இடிவிழக் கூடாதா என்று சொல்லாமல் உள்ளத்தில் உன்னித்) தெய்வத்தைத் திட்டுகின்றாள். வாழ்க்கையில் ஓர் இன்பமும் துய்த்தவள் அல்லள். மற்றும், உன்னைக் கட்டிக்கொண்டு என்ன நலம் கண்டேன்? நல்ல துணிமணி உண்டா? நகை நட்டு உண்டா? ஆரவார உணவு உண்டா? என்றெல்லாம் கூறிக் கணவனைத் திட்டினாளா? அதுதான் இல்லை. ஐயோ! நம் கணவர் இந்தப்பாடு படுகிறாரே - அவர் நன்றாய் இருக்க வேண்டும் - என்று கணவன்மேல் அன்பு செலுத்துகிறாள். இதுதான் தலைக்கற்போ!

இந்தச் செய்தி, குமண மன்னனைப் புலவர் பெருஞ் சித்திரனார் பாடிய புறநானூற்றுப்பாடல் ஒன்றில் உள்ளது. பாடல் பகுதி வருக:

“வாழு நாளோ டியாண்டுபல உண்மையின்
திர்தல் செல்லா தென்னுயிரெனப் பலபுலந்து
கோல்கா லாகக் குறும்பல ஒதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்துயின்று