பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

237


இந்த உடம்புக்குள்ளே இருப்பதால், உடம்பு தானி ஆகு பெயராய் ‘மெய்’ எனப்பட்டதாம்.

இவர்கள் அனைவரும் ஓர் உண்மையை மறந்துவிட்டனர். உடல் என்ற பெயரும் உடம்பு என்ற பெயரும் எவ்வாறு ஏற்பட்டதோ அவ்வாறே மெய் என்ற பெயரும் ஏற்பட்டது என்பதை அவர்கள் எண்ணினாரல்லர். உடல், உடம்பு என்னும் பெயர்கள் வந்ததற்கு இயல்பான காரணம் ஒன்றும் கூற முடியாதது போலவே, மெய் என்பதற்கும் இயல்பான காரணம் கூற முடியாது. பொய் - மெய் என்ற அடிப்படையில் வலிந்து செயற்கையான காரணமே கூற முடியும்.

ஓரிடத்தில் வாழ்ந்தவர்கள் உடல் என்றனர். இன்னோரிடத்தில் இருந்தவர்கள் உடம்பு என்றனர். வேறோரிடத்தில் வசித்தவர்கள் மெய் என்றனர். அனைவரும் பிற்காலத்தில் கலந்து கொண்டபோது, மூன்று சொற்களையும் ஒரே பொருள் உடையனவாய் அறிந்து ஏற்றுக்கொண்டனர். ஒரு பொருள் பல் பெயர்கள் ஏற்பட்ட வரலாறு இன்னதே.

இங்கே திருவள்ளுவரின் உதவியை நாடிப்பார்ப்போம். தன் எதிரே இருக்கும் பொருளை அவ்வாறே காட்டுகிற கண்ணாடியைப் போல், உள்ளத்தில் உள்ள உணர்வை அப்படியே முகம் அறிவிக்கும் என்னும் கருத்துடைய

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்”

என்னும் குறட்பா ஈண்டு எண்ணத்தது. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்னும் முதுமொழியின் கருத்தும் இன்னதே.

இங்கே முகம் என்பது மெய் (உடம்பின் பகுதி); நெஞ்சம் கடுத்தது (அகத்தின் அழகு) என்பது (மெய்யில்