பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

239



தொல்காப்பியர் இவ்வாறு கூறியிருப்பது, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது. பஞ்ச பாண்டவர் எத்தனை பேர் என்பதை விளக்க வந்த ஒருவர், பஞ்ச பாண்டவர் கட்டில் காலைப் போல மூன்று பேர் என்று சொல்லி இரண்டு விரல்களைக் காட்டி ஒன்று என எழுதிப் பின் அதையும் அழித்து விட்டாராம். இந்த மாதிரியில், தொல்காப்பியர் முப்பத்திரண்டைப் பதினாறாக்கிப் பின் பதினாறை எட்டாக்கியுள்ளார். ஆனால் இதற்குங் கீழ்க் குறைக்கவில்லை. அடுத்து மூன்றாவது நூற்பாவில் எட்டு என்னென்ன என்று அறிவித்துள்ளார்.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”

என்பது நூற்பா. முப்பத்திர்ண்டு, பதினாறு என்று கூறிய இடங்களில் ‘மெய்ப்பாடு’ என்னும் சொல்லைப் பயன்படுத்தாமல், எட்டைக் கூறிய இடத்தில்தான் மெய்ப்பாடு என்னும் சொல்லை அறிமுகம் செய்துள்ளார். எட்டு இன்னது - இன்னது என எட்டுப் பெயர்களைக் கூறி விளக்கியவர், முப்பத்திரண்டு எது எது - பதினாறு எது எது எனப் பேச்சு - மூச்சு காட்டினாரிலர். அதனால், உரையாசிரியர்கள் மண்டையை உண்டத்துக் கொண்டு, முப்பத்திரண்டுக்கும், பதினாறுக்கும் குறிப்பாகப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளனர். இனி உரையாசிரியர்களின் வழி நின்று முப்பத்திரண்டையும் எட்டையும் காண்பாம்.

எட்டு வகை மெய்ப்பாடுகளுள் முதலில் கூறப்பட்டுள்ள ‘நகை’ என்பதை எடுத்துக் கொள்வோம். நகை என்றால் சிரிப்பு. (1) குழந்தை குழறிக் குழறிப் பேசுகிறது. (2) அதைக் காதால் கேட்கிறோம். (3) உள்ளத்தில் இன்ப உணர்ச்சிக் குறிப்பு தோன்றுகிறது. (4) அதனால் வாய் விட்டுச் சிரிக்கிறோம். இங்கே நகை என்னும் மெய்ப்பாடு தொடர்பாக நான்கு நிலைகளைக் காண்கிறோம். அதாவது: