பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

சுந்தர சண்முகனார்


சிரிப்புக் காரணமான பொருள் அல்லது செயல் - அதைக் காணுதல் அல்லது கேட்டல் - அதனால் உள்ளத்தில் உண்டாகும் உணர்வு - அதனால் வெளியில், அதாவது உடம்பில் காணப்படும் மாற்றங்கள். இவ்வாறு எட்டு மெய்ப்பாடுகட்கும் நான்கு நான்கு வீதம் பெருக்கிப் பார்த்தால் (8x4=32) முப்பத்திரண்டு மெய்ப்பாடுகள் கிடைக்கின்றன. இந்தக் கணக்கு பேராசிரியரின் உரைவழிக் கிடைப்பதாகும்.

இளம்பூரணர் என்னும் தொல்காப்பிய உரையாசிரியரின் 32 என்னும் கணக்கு வேறு மாதிரியானது - மிகவும் எளியது. தொல்காப்பியர், நகை முதலாகிய மெய்ப்பாடுகள் எட்டும் நான்கு நிலைக்களன்கள் வழியாகத் தோன்றும் - அதாவது, ஒவ்வொன்றும் நான்கு நான்கு வகைப்படும் என்பதாக (8x4=32) முப்பத்திரண்டு கொண்ட பட்டியல் பின்னால் தந்துள்ளார். இளம்பூரணர் இந்த முப்பத்திரண்டை எடுத்துக் கொண்டுள்ளார்.

முப்பத்திரண்டு பதினாறாக ஆன விவரமாவது: குழந்தை குழறிப் பேசுதல் - அதைக் காதால் கேட்டல் என்னும் இரண்டையும் சிரிப்பின் காரணம் என ஒன்றாக்கிக் கொள்ளல் வேண்டும். அடுத்து, உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக் குறிப்பு - அதனால் வெளியில் உடம்பில் தோன்றும் மாற்றம் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கிக் கொள்ளல் வேண்டும். இவ்விதமாக நான்கை இரண்டாகச் சுருக்கினால், (8+2=16) பதினாறு என்ற பதில் கிடைக்கும்.

நகை என்னும் மெய்ப்பாடு தொடர்பாக நான்கு கூறுகள் கண்டோம். நான்கை இரண்டாக்கினோம். இரண்டை ‘நகை’ எனச் சுருக்கமாக ஒன்றாக்கினால், மெய்ப்பாடுகள் நகை முதலாக உவகை ஈறாக எட்டு வகைப்படும் என்ற முடிவு கிடைக்கும்.