பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சுந்தர சண்முகனார்


கடுந் தெய்வங்களைப் போல் இல்லாமல் - உயிரைப் பறிப்பது போல் உருட்டி மிரட்டிப் பார்க்கும் உலுத்தர்களைப் போல் இல்லாமல், காந்தியடிகளைப் போலக் காண்பதற்கு எளிய தோற்றம் உடையவன் - அதாவது - காண வருவோர்க்கு நம்பிக்கை யளிக்கத்தக்க இனிய எளிய தூய தோற்றம் உடையவன் என்பதுதான் அந்தப் புதிய பொருள்; இத்தகையோனைக் காட்சிக்கு எளியன் எனல் முக்காலும் சாலும்.

காட்சிக்கு எளியன் என்னும் ஆழ்கடலுள் குளித்தால் மேலும் ஓர் ஆணி முத்து கிடைக்கலாம். அந்தத் தலைவன் அங்கே யெல்லாம் போகமாட்டான்; இங்கே மட்டுமே வருவான் என்றோ - தனக்கு உற்றவர் வீடுகட்கு மட்டுமே செல்வான்; வருந்தி யழைத்தாலும் மற்றவர் வீடுகட்கு வரமாட்டான் என்றோ - யாரும் சொல்ல முடியாது. கண்ட இடங்களுக்குச் சென்றால் தன் மதிப்பு குன்றிவிடும் - அல்லது தனக்குத் தீங்கு நேரும் என்றெல்லாம் அஞ்சி அவன் தயங்கமாட்டான்; எங்கும் செல்வான்; எல்லோரையும் காண்பான். அதாவது, எங்கோ, எப்போதோ அரிதாய்க் காணப்படுபவன் என்ற இழுக்குக்கு இடமின்றி, எங்கும் எளிதாய் அடிக்கடிக் காணப்படுவான் என்பதுதான் அந்த ஆணிமுத்து அனைய கருத்து.

மேற்கூறிய அனைத்துப் பண்புகளும் உடையவனே நூற்றுக்கு நூறு காட்சிக்கு எளியன் எனப் பாராட்டற்கு உரியன். எத்துணை இனிய கருத்து! எத்துணை உயர்ந்த குறள்!

ஒரு சிறிது படிப்போ, பட்டமோ, பதவியோ, பணமோ வந்து விட்டாலே, தங்களைப் பெருமக்கள் என்று தாங்களே தவறாக எடை போட்டுக் கொண்டு, பலரோடு பழகாமல், பேசாமல், தனியிடத்தில் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக் கொள்கின்ற அற்பர்களுக்காக இந்தக் குறள்