பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சுந்தர சண்முகனார்


இடத்தில் இருக்க வேண்டும்; தன்னை நாடியவரிடம் இருக்கக்கூடாது. அதியமான் என்னும் அரசனை ஒளவையார் பாடியுள்ளார். ‘யானைப் பொம்மையுடன் விளையாடுவதைப் போலச் சிறுவர்கள் தன்னுடன் விளையாடித் தன் கொம்புகளை நீரில் கழுவுமளவிற்குக் காட்டி நிற்கும் ஒரு பெரிய யானையைப் போல, அதியமான் தன்னைச் சேர்ந்தோரிடம் இனிமையாய்ப் பழகுவானாம்; அதே யானை மதம் பிடித்துத் திரிந்தாற் போலத் தன் பகைவரிடம் அவன் நடந்து கொள்வானாம்’ என்பது ஒளவையார் பாடலின் கருத்து. இதனை,

“ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே”

என்னும் புறநானூற்றுப் பாடலால் அறியலாம். இப்படிப் போல, சங்க நூல்களில் இன்னும் பலப்பல எடுத்துக் காட்டுகள் உள. எனவே, மன்னன் தன்னை நாடி வந்தோர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாயிருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்தான், மக்களின் குறைகளையும், முறைகளையும் நேரில் அறிந்து போக்கவியலும்.

அடுத்து, கடுஞ்சொல்லன் ‘அல்லனேல்’ என்றார் வள்ளுவர். ஏன், ‘இன்சொல்லன்’ என்றிருக்கலாமே. இல்லை - இன்சொல்கூட வேண்டியதில்லை; கடுஞ்சொல் இல்லாதிருந்தால் போதும். அரசன் சில குற்றங்களைக் கண்டிக்கும் போது இன்சொல் கூறமுடியாமற் போகலாம். ஆனால் கடுஞ்சொல்லின்றி நடுநிலையில் நடந்து கொள்வது நன்று.