பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

29


என்பதுதான் அந்தக் கருத்து. இதன் உட்பொருள் என்ன? ஒருவர் நமக்குத் துன்பம் செய்யின், பதிலுக்கு அவருக்குத் துன்பம் செய்யக்கூடாது என்பதாகும். ‘மறு கன்னத்தைக் காட்டு’ என்பது பொருள் பொதிந்த தொடர் - அதாவது - அவர் உன்னை அடித்ததாகவே கருதாதே - அவர் உன்னை அடிப்பதில் இன்பம் காண்கின்றார் என்றால், அவருக்கு இன்னொரு கன்னத்தை வேண்டுமானாலும் காட்டு - அடித்து அவா அடங்கட்டும் - ஆசை தீரட்டும். என்பது இதன் உட்பொருள் எனலாம்.

வள்ளுவப் பெருந்தகையும் ஏசு பிரானும் கூறியுள்ள ஒத்த கருத்தில் ஒருவகைச் சிக்கல் எழலாம். அஃது என்ன? தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யின், மேலும் தீமை செய்வார் என அஞ்சி நன்மை செய்து அடி பணிகிறான் - இவன் ஒரு கோழை என்று தீமை செய்தவரோ பிறரோ கருதலாம். கருதிவிட்டுப் போகட்டுமே! தம்மால் எதிர்க்க முடியாதவரிடத்தில் அடங்கிப் போவது நன்மைதானே! மற்றும், தம்மால் எதிர்க்க முடிந்தவரிடத்தும் அதாவது தம்மினும் வலிமை யற்றவரிடத்தும் அடங்கி ஒழுகின், எவ்வளவோ பெரியவர் தம்மினும் தாழ்ந்தவரிடத்தும் அடங்கி ஒழுகுகிறாரே - எவ்வளவு பண்புடைமை! என்று உலகம் போற்றும். இங்கே, ‘சான்றாண்மை’ என்னும் தலைப்பில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகள் நுணுகி நோக்கி மகிழ்தற்கு உரியன. அவை வருக. வல்லார்க்கு வலிமை எனப்படுவது பணிவுதான்; அப்பணிவு, சான்றோர் தம் பகைவரைத் திருத்த உதவும் படைக்கல மாகும். ஒருவரது சால்புடைமையை அறிவதற்கு ‘உரைகல்’ எது எனில், தமக்கு நிகர் அல்லாதவரிடத்தும் தோல்வியை ஒத்துக்கொள்ளும் அடக்கம்தான். இவை வள்ளுவரின் கருத்துகள்.