பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

55


பான வாழ்க்கைக் குறிப்புகள் இரண்டினை மட்டும் இவண் தருகிறேன்.

1.1 பகையின் தோற்றம்

1942-ஆம் ஆண்டு கோடை விடுமுறை நாளில் நடந்த நிகழ்ச்சி ஒன்று முதலில் தரப்பெறும். அப்போது யான் மயிலம் கல்லூரியில் விரிவுரையாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். விடுமுறையில் யான் புதுச்சேரிக்கு வந்திருந்தேன். ஒருநாள் புதுச்சேரியைச் சார்ந்த உப்பளம் என்னும் ஊரில் பாரதிதாசனார் தலைமையில் யான் சொற்பொழிவாற்றினேன். ஐயா அவர்கள், முடிவுரையில் என்னைத் தாறுமாறாகத் தாக்கிப் பேசிவிட்டார்கள். நான் பதில் கொடுக்க உடனே எழுந்தேன். என்னை மு. த. வேலாயுதனார் என்பவர் தடுத்து அமரச் செய்துவிட்டார். இளைஞனாகையால் ஐயாவின் மேல் யான் பெரும்பகை கொண்டிருந்தேன்.

1.1.2 காரிருளில் மின்னல்

1942 கோடை விடுமுறையில் இந்தப் பிணக்கு ஏற்பட்டது. விடுமுறை முடிந்ததும் மயிலம் தமிழ்க் கல்லூரிக்குப் பணியாற்றச் சென்றேன். காலையில் கல்லூரி வகுப்பு தொடங்குவதற்கு முன்பு, ஆசிரியர்களும் மாணாக்கர்களும் ஓரிடத்தில் வரிசையாக நின்று கூட்டுக் குழு வழிபாட்டுப் பாடல்கள் பாடிய பின்னரே வகுப்புக்குச் செல்வது வழக்கம்.

குழு வழிபாட்டில் முதலில் கடவுள் வணக்கப் பாடலும் அடுத்துத் தமிழ் வாழ்த்துப் பாடலும் பாடப்பெறும். தமிழ் வாழ்த்தாகச் சுப்பிரமணிய பாரதியார் பாடல்கள், சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியப் பாடல்கள், கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் பாடல்கள் முதலியவை மாறி மாறிப் பாடப்படும், மாணாக்கர் இருவர் பாடுவர். முதல்