பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

69


எழுதியிருக்கிறாய். ஆமாம், இந்த வயதில் எவ்வளவு வேலையா யிருப்பினும் முயன்று செய்யத்தானே வேண்டும்? சில நேரம் பல வேலைகள் சுமந்து போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறாய். வேலைகள் எல்லாம் சுமையாகக் குவியாமல் இருப்பதற்கு ஒரு வழி உண்டு. அந்த வழியினை, நீ என்னிடம் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்திலேயே நான் அறிவித்திருப்பதாக நினைவிருக்கிறது. மீண்டும் அதனை ஈண்டு உனக்கு நினைவு செய்கிறேன்.

வேலையில் காலக்கழிவு செய்தல் கூடாது. எந்த வேலையா யிருப்பினும் உரிய நேரத்தில் முடித்துவிட வேண்டும். பிறகு பார்ப்போம் என்று ஒத்திப்போடும் இயல்பு நம் ஆக்கத்திற்குப் பெருந்தடைக் கல்லாகும். முழு வேலையையும் ஒத்திப்போடுவதற்கு மட்டும் இதனை நான் கூறவில்லை; குறித்த வேலையை அரைகுறையாய் விட்டு வைப்பதற்கும் சேர்த்தே நான் இந்த அறிவுரையினைக் கூறுகின்றேன். அரைக் கிணறு தாண்டலாமா?

வேலையைக் குறையாய் நிறுத்தும் இயல்பு உடையவரிடந்தான் வேலைகள் மலையெனக் குவிந்து விடுவது வழக்கம். முற்பகல் வேலையைப் பிற்பகல் செய்ய, பிற்பகல் வேலையை மறுநாள் செய்ய, - இப்படியே போய்க்கொண்டிருந்தால், எந்த வேலையும் ஒழுங்குறாது. அவசரக்கோலம் அள்ளித் தெளித்த கதையாய்ப் போய்விடும். ‘செய்வன திருந்தச் செய்’ என்பது முதுமொழி யல்லவா?

சிலர் செய்யவேண்டிய வேலையை உரிய காலத்தில் செய்யாமல் காலப் பாழ் செய்து, வேறு இன்பப் பொழுது போக்குக் களியாட்டங்களில் ஈடுபடுவது உண்டு. வெளித் தோற்றத்திற்கு அவர்கள் களியாட்டயர்வதாகக் காணப்படினும், அவர்தம் உள்ளத்தே,. ஐயோ! வேலையை விட்டு விட்டு வந்து விட்டோமே, எப்போது செய்வது-என்ன