பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சுந்தர சண்முகனார்


மகள் - பூமாதேவி என்றும் பெண்ணாக உருவகிக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. இயற்கைப் பெண் தெய்வ வழிபாடு இது. பால் தரும் பசுவையும் பெண் தெய்வமாக வழிபடுவது இந்திய மக்களின் மரபு.

மாரியம்மன் வழிபாடு

மாரியம்மன் என்னும் பெயரில் நாடெங்கும் கோயில்களும், வழிபாடுகளும் உண்டு. மாரியம்மன் மாரியாத்தா என்ற பெயராலும் வழங்கப்படும். அம்மன் - ஆத்தா என்றால் தாய் என்று பொருள். மாரி என்றால் மழை. எனவே, மழையைத் தந்து மக்களை வாழ வைக்கும் தெய்வம் என்னும் பொருளில் மாரியம்மன் - மாரியாத்தா என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மாரியம்மன் கோயில் விழாக்கள் நாட்டில் மிகவும் பெயர் பெற்றவை.

மாரியம்மன் வரலாறு

திருவள்ளுவரின் மனைவிதான் மாரியம்மன் ஆனாள் என்பது ஒரு கதை. பிறகு முனிவரின் மனைவி நாகாவலி என்பவளே மாரியம்மன் ஆனாள் என்பது மற்றொரு கதை. சமதக்கினி முனிவரின் மனைவி இரேணுகாதேவி என்பவளே மாரியம்மன் ஆனாள் என்பது வேறொரு கதை. இரேணுகாவின் மகன் பரசுராமன் தாய் செய்த ஒரு பெருங் குற்றம் பற்றி, அவளைத் தலை வேறாகவும், உடல் வேறாகவும் வெட்டி விட்டானாம். எனவேதான், சில இடங்களில் கழுத்தை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். கழுத்து மாரியம்மன் கோயில்கள் தோன்றிய வரலாறுகளுள் இஃதும் ஒன்று. சிலர் வழிபடும் வாசவி என்னும் வாசவாம்பாளுக்கும் மனிதத் தொடர்புடைய வரலாறு சிலரால் கூறப்படுகிறது.