பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

சுந்தர சண்முகனார்


என்னுடன் இருந்த நண்பர்களும் அப்போதுதான் அறிந்தோம். பிரெஞ்சுக்காரர் 17-ஆம் நூற்றாண்டிலேயே ஆட்சி மேற்கொண்டு நகரைப் புதிதாய் வடிவமைத்தனர். நெடுங்காலம் ஆனதால் இடுகாடு அறியாப் பொருளாயிற்று.

5. இனச்சேரி

இப்போது சேரி என்பது, தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பைக் குறிக்கும் பெயராகக் கருதப்படுகின்றது. உண்மை இஃதன்று. பலரும் சேர்ந்து வாழும் இடம் சேரி என்பதே சரியான பொருளாகும். ஆனால் ஓர் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வோர் இனத்தவரும் வாழ்ந்த ஒவ்வொரு பகுதியும், அவ்வவ் வினத்தின் பெயரால் சேரி ஒரு காலத்தில் பெயர் வழங்கப்பட்டது என்ற உண்மைதான் அது.

5.1 தெருப் பெயர்கள்

புதுவையில் உள்ள தெருக்களுள் பல சாதிகளின் பெயரால் குறிப்பிடப்பட்டன. எ.கா: சான்றோர்(சாணார்) வீதி, சிறிய பார்ப்பாரத் தெரு, பெரிய பார்ப்பாரத் தெரு, வேளாளர் தெரு, செட்டி தெரு, வைசியர் தெரு, செங்குந்தர் தெரு, வண்ணாரத் தெரு, வன்னியர் தெரு, யாதவர் தெரு முதலியன. புதுச்சேரி நகரில் கிறித்துவர் மிகுதியாயிருக்கும் பகுதி, இப்போதும் இந்துக்களால் ‘கிறிஸ்தவபுரம்’ எனக் குறிப்பிடப்படுவதுண்டு. இது போலவே, இசுமாலியர் மிகுதியாயிருக்கும் பகுதி முசுலீம் வட்டாரம் எனப்படுவதுண்டு. அரிக்கமேடு (அருகன் மேடு) உட்பட்ட புதுச்சேரிப் பெரும்பரப்பில் பண்டு கிரேக்கக் குடியேற்றம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு பல பிரிவினரும் சேர்ந்து வாழும் சேரியாகப் புதுச்சேரி உள்ளது. (இப்போது புதுச்சேரித் தெருக்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன.)