பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

சுந்தர சண்முகனார்



“செந் தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின்
மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை” (6, 7)

எனத் ‘தென் புதுவை’ என்று குறிப்பிட்டுள்ளார். வடக்கே ஒரு காசி யிருப்பதால் தெற்கே இருப்பதைத் தென் காசி எனவும், தெற்கே ஒரு பழநி இருப்பதால் வடக்கே உள்ளதை வட பழநி எனவும் குறிப்பிடுவதுபோல், வடக்கே ஒரு புதுவை இருப்பதால் இது தென் புதுவை எனப்பட்டதா? ‘தென்' என்பதற்குத் தெற்கு, இனிமை, அழகு என்ற பொருள்கள் உண்டு. இப் பொருள்களுள் எதை உள்ளத்தில் கொண்டு பாரதியார் தென்புதுவை எனக் கூறியிருப்பார்?

6.1 பட்டறிவு

பொறுத்தருள் வேண்டும். இங்கே அடியேனது சொந்தப் பட்டறிவு நிக்ழ்ச்சி ஒன்றைக் குறிப்பிட ஒப்புதல் அளிக்க வேண்டுகிறேன்:

1940-ஆம் ஆண்டு மயிலம் கல்லூரியில் யான் விரிவுரையாளனாயிருந்தபோது ஒருநாள், எல்லப்ப நாவலர் இயற்றிய அருணைக் கலம்பகம் என்னும் நூலை நடத்திக் கொண்டிருந்தேன். ஒரு பாடலில் ‘தென் அருணை’ என்னும் தொடர் இருந்தது. திருவண்ணாமலைக்கு, அருணகிரி அருணாசலம் முதலிய பெயர்களும் உண்டு. அருணாசலம் என்பதன் மரூஉ மொழியே அருணை என்பது. தென் அருணை என்பதற்கு, அழகிய அருணை-இனிய அருணை-தெற்கே உள்ள அருணை என்றெல்லாம் பொருள் செய்யலாம் என்று நான் கூறினேன். உடனே, என்னிலும் அகவையிலும் உருவத்திலும் பெரிய மாணாக்கர் ஒருவர், ‘அப்படியென்றால், வடக்கே ஓர் அருணை இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘வடக்கே ஓர் அருணை இருப்பதால்தான் இதனைத் தென் அருணை என எல்லப்ப நாவலர் குறிப்