பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

55


இங்கே இதுவரையும் தமிழ்தான் நமக்கு உவந்தது. அதிலுள்ள பாடல்கள் மிக உயர்ந்தன என்று இதுவரை சொல்லிக்கொண்டு வந்த எஸ்.வி.வி. சங்கீத சாகித்தியத்துக்கு வடமொழியும் தெலுங்குந்தான் பொருத்தமான பாஷைகள். தமிழ் எந்த விதத்திலும் உதவாது என்று ஒய்.எம்.சி.ஏ.இல் அழுத்தம் திருத்தமாகப் பிரச்சாரம் செய்துவிட்டார். இனிமேல் எல்லாரும் அதை ஒட்டிப் பேச வேண்டியதுதானே. எல்லாம் கோவிந்தா கோவிந்தாதான்.

இந்தப் பிரச்சாரம் எல்லாம் நன்மையைத்தான் விளைவிக்கப் போகிறது. ஒரு நண்பர் தமிழிலே ஒன்றும் இல்லை கம்பரில் ஒன்றும் இல்லை என்று பிரச்சாரம் செய்தார். ஏதோ யுனிவர் சிட்டியிலுள்ள ஸ்காலர்ஸ் அவரை ஆமோதித்தும் பேசி வந்தார்கள். மற்றவர்களோ அதிக ஆர்வங்கொண்டு தமிழையும் கம்பரையும் கற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே எதிர்ப் பிரச்சாரம்தான் நம்மவருக்கு ஊக்கம் கொடுக்கும். ரொம்ப திருப்தி.

கர்னாமிர்த் திரட்டின் விஷயம் எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. சங்கீத வித்வான்களைக் கொண்டு தெரிந்துகொள்ள முயலுகிறேன். ஒன்று நிச்சயம். தமிழ்நாட்டில் வழங்குகிற ராகங்கள் எல்லாம் இங்கேயே பிறந்து வளர்ந்து வந்தன. ஆதியில் தமிழ்ப் பெயர்கள் அவைகளுக்கு வழங்கிவந்தன. நம்முடைய தலையில் வடமொழிப் பெயர்கள் வந்து விழுந்ததுபோல், ராகங்கள் தலைகளிலும் வடமொழிப் பெயர்கள் விழுந்து தொலைந்தன.

தாங்கள் தேவகோட்டைக்கு வருவதாய் இருந்தால் நன்றாய் இருக்கும். தமிழிசை மாநாடு பல இடங்களிலும் கூட வேண்டியதுதான் வெகு பிரயோசனம்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் சுகந்தானே.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்