பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ரசிகமணி டிகேசி


திருக்குற்றாலம்
தென்காசி
29.7.45

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

இப்போதுதான் பிற்பகல் மதுரையிலிருந்து இங்கு வந்து சேர்ந்தேன். நேற்று மாலை மதுரை காலேஜுக்காக எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாளது பாட்டுக் கச்சேரி நடந்தது. அபாரமாக இருந்தது சங்கீதம். ஹாலுக்குள் இரண்டாயிரம் பேர், தெருவில் நின்று கேட்டவர் ஆறாயிரம் பேர் வசூலான தொகை ரு 81,000. இதுவரை எங்கும் ஒரு கச்சேரியில் இவ்வளவு வசூலானது கிடையாது.

இதெல்லாம் காரணமாக எல்லாருக்கும் ஒரே திருப்தி. டாக்டர் ராமசுப்பிரமணியம் அவர்களுக்கு அபார திருப்தி. அவர்கள்தான் நிதி விஷயமாக வேலை செய்து வசூல் செய்தது. அவர்கள் முதலில் ரூ. 20,000 தான் எதிர்பார்த்தார்கள். வசூலானது நாலு மடங்குக்கு மேல் போய்விட்டது. சந்தோஷத்துக்குக் கேட்பானேன்.

தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது 70 ஆவது ஆண்டுவிழா ஆகஸ்டு 8, 9, 10 ஆம் தேதிகளில் நடத்துவதாக காரியதரிசி வெ. நாராயணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. ஆனால் எனக்கு நாகர்கோயில் போய்வர இயலவில்லை. தாங்கள் போவீர்கள் என்று நம்புகிறேன். போனால் விழா சரியான முறையில் நடைபெறுவதாக மேற்பார்த்துக்கொள்ள வேண்டும்.

விழாவை நடத்த முன்வருகிறவர்கள் ஒரு தினுசான ஆட்கள். அதற்கு நாம் என்ன செய்வது என்றுகூடச் சொல்லத் தோன்றும் அவர்களுக்கு. வேண்டாத பேர்களைக் கொண்டு பேசச் செய்வார்கள். ஆகையால் தாங்கள் போகிறதாயிருந்தால் அசந்தர்ப்பங்கள் நடவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.