பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

87




முகாம்,
சென்னை
22.1.46

வி.ஆர்.எம். செட்டியார் அவர்களிடமிருந்து புத்தகம் வந்துவிட்டது.

ரிஜிஸ்தர் புக் போஸ்டில் வந்தது. உறையை அப்புறப்படுத்திப் பார்க்கவும், ஏதோ ஒரு அழகான புத்தகம் அல்லவா வந்திருக்கிறது. கைக்கே அலங்காரமான புத்தகம் என்று மிக்க திருப்தியோடு கையில் வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். பிறகு தெரிந்துவிட்டது. என்னைப் பற்றிய புத்தகம்தான் என்று. பயமே உண்டாய்விட்டது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பது போன்ற பயந்தான். புத்தகத்தை ஊடே ஊடே வாசித்துப் பார்த்தபோது பயம் போய்விட்டது. லஜ்ஜை ஏற்பட்டுவிட்டது. அப்படியே புத்தகம் மேஜை மேல் கிடக்கிறது. படிக்கவில்லை. ஆனந்தியைக் கூப்பிட்டு மேலட்டை ஒன்று போட்டுக் கொண்டுவரச் சொன்னேன். அப்படி மேலட்டை போட்ட புத்தகந்தான் கையில் வைத்துக்கொண்டு படித்தேன். வந்தவர் போனவர்களுக்கு ஏதோ ஒரு புத்தகத்தை, எனக்குச் சம்பந்தம் இல்லாத புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றுதானே படும்.

அணையடைச் சேலையில் வைத்துப் பிள்ளையை எடுத்த மாதிரி வெகு ஜாக்கிரதையாய் வெகு அருமையாய் என்னைக் கையில் எடுக்கிறீர்கள்.

பெரியாழ்வார் ஆய்ச்சியர்கள் அவர்களுக்கு என்ன ஆசை, ஆர்வம் எல்லாம் ஏற்பட்டதோ அவ்வளவும் தங்களுக்கும் உண்டாய்விட்டது. தங்கள் பேச்சை வைத்துப் பெரியாழ்வார் பாசுரங்களை நன்றாய் விளக்கலாம். ஆழ்வார் குழந்தையோடு எப்படி ஒட்டுகிறாரோ அப்படியே தாங்களும் என்னோடு ஒட்டிக்கொண்டீர்கள்.