பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இறுதிப்பாட்டு

எனது இறுதிப்பாட்டில் இன்பத்தின் அனைத்து இசைகளும் கலந்து இயங்கட்டும் - எந்த இன்பம் நாநிலத்தில் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்து பசும்புல் அளவுக்கு மிஞ்சி வளர்ந்து மண்டி விடும்படி செய்கிறதோ, எந்த இன்பம் பிறப்பு இறப்பு என்னும் இரட்டையர்களை வையகம் எங்கும் ஆடிப்பாடித் திரியும்படி செய்கிறதோ, எந்த இன்பம் சூறைக்காற்றோடு சுழன்று திரிந்து அனைத்துயிர்களையும் மகிழ்ச்சி வெறியுடன் எழும்படி செய்கிறதோ, எந்த இன்பம் இன்னல் என்னும் செந்தாமரை மீது கண்ணீர் சிந்திக்கொண்டு அமர்ந்திருக்கிறதோ, எந்த இன்பம் தன் உடைமைகள் அனைத்தையும் குப்பையில் கொட்டி விடுகிறதோ, எந்த இன்பம் சொல்லற்ற பேசா நிலையில் இருக்கிறதோ, அந்த இன்பத்தின் இசைகள் என் பாட்டோசையில் கலந்து ஒலிக்கட்டும். -கீ