பக்கம்:இரவு வரவில்லை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. உனக்கேது காதல்?


என்வீட்டுச் சிறுசன்னல் வழிவந்து தென்றல்
இதழ்விரித்த முல்லையினைத் தூதாகப் போக்க
என்வீட்டாள் எனஎண்ணிப் படுக்கையிலே கையை
எடுத்துவைத்தேன்; தலையணைதான் அங்கிருக்கக் கண்டேன்
தென்னவனின் தீந்தமிழை, என்னுயிரைக் காலைச்
சிட்டினங்கள் செவிபாய்ச்சும்! இதுவேஎன் காதல்!
என்மனைவி பின்வந்தாள்! ‘காதல்’ எனச் சொன்னேன்!
‘உனக்கேது காதல்?’ என எனைஇடித்துப் போனாள்!
1


தெருவினிலே அங்குமிங்கும் குரல்காட்டும் சேவல்!
தொடுவான நீள்பரப்பிற் செவ்வரிகள் பாயும்!
இருள்நழுவி வந்தவழி தெரியாமல் ஒடும்!
எதிர்உள்ள நீர்நிலைகள், மரங்கொடிகள், தோப்பு
பொருளுள்ளான் முகம்போலப் புதுப்பொலிவைக் காட்டும்!
பூரித்துப் போனேன்நான்! இதுவேஎன் காதல்!
சுருள்கூந்தல் என்மனைவி அருகினிலே வந்தாள்!
‘காதல்’ என்றேன்! ‘உனக்கேது காதல்?’எனச் சொன்னாள்!
2


வயல்செல்லும் காளைகளின் நடைகண்டேன்; அந்த
மறக்காளை பின்செல்லும் நல்உழவர் கண்டேன்;
குயிலொன்று தொலைவினிலே பாட்டிசைக்கக் கேட்டேன்!
குளிரோடை, மரஞ்செடிகள் எங்கும்பூக் காடே!
செயலற்றேன்; வான்முகட்டில் தோன்றுகின்ற சாரற்
செழுமையினை நான்கண்டேன்! இதுவேஎன் காதல்!
கயல்விழியாள் என்மனைவி அருகினிலே வந்தாள்!
‘காதல்’ என்றேன்! ‘உனக்கேது காதல்?’ எனச் சொன்னாள்!
3


7
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/16&oldid=1179685" இலிருந்து மீள்விக்கப்பட்டது