பக்கம்:இரவு வரவில்லை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. துயர் அறிவாரோ தோழி?

ஊரெல்லாம் விளக்கேற்றி விட்டார்கள்; ஊரின்
மேற்றிசையில் உயர்வானில் உருள்கின்ற தட்டாம்
சீர்ப்பரிதி! செம்பொன்னாற் செய்தபெருங் குண்டு!
சென்றதிசை பார்க்கின்றார்; விளக்கைப்பார்க் கின்றார்;
கூரொளியைச் செங்கதிரைச் செங்கதிரின் வீழ்ச்சிக்
குளிர்வற்றா ஒளிப்பிழம்பில் அருகிவரும் செம்மை
நாரொத்த பொற்சுடரைப் பார்க்கின்றார் பெண்கள்!
நானடையும் துயரத்தை அறிவாரோ? தோழி!
1


வானத்தில் முழுநிலவு மெய் யெழுத்துப் புள்ளி
வந்ததடி இன்னுமவர் ஊர்வந்தார் இல்லை!
சீனத்து வெண்பட்டு நிலவொளியிற் பெண்கள்
சிரித்தாடி மகிழ்கின்றார்! நிலவுதருந் தொல்லை
நானடைந்து சாகின்றேன்! அவர்க்கதனா லென்னாம்?
‘நலஞ்செய்யும் திங்க’ ளென்றே இங்குள்ள மக்கள்
தேனொழுகப் பேசுகின்றார்! அதிற்குறைச்ச லில்லை!
அணுவணுவாய்ச் செல்லுதுயிர் அறிவாரோ? தோழி!
2


கீழ்த்திசையிற் கழிதாண்டி, மணற்பரப்பைத் தாண்டிக்
கிடக்கின்ற நெடுங்கடலும் இராமுழுதும், தோழி!
பாழ்செய்ய முனைந்ததுபோற் கொந்தளித்துச் சீறிப்
பாறையிடம் சண்டைக்கு வந்துவந்து பாயும்!
வாழ்வளிக்க வந்தவனால் மனத்துயரம் என்றால்
மற்றவர்கள் என்செய்வார்? மடமையதன் செய்கை!
தாழ்ந்தசெயல் தனித்திருத்திப் பிரிந்துசெலல் என்றால்
இங்குள்ள மக்களுக்கு வாய்நொந்தா போகும்?
3


10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/19&oldid=1179821" இலிருந்து மீள்விக்கப்பட்டது