பக்கம்:இரவு வரவில்லை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. எங்கிருந்தால் என்ன?


நாள்விளக்க வருகின்ற வைகறையைப் போல
நலம்விளக்க வந்தவளே! விடிகாலை வானே!
வாள்விளக்கம் உன்விழியை; முகம்விளக்கும் திங்கள்;
மயில் விளக்கும் உன்சாயல்; மலைமூங்கில் உன்றன்
தோள்விளக்கும் : காடடர்ந்த பசுங்கொடிகள் எல்லாம்
தோன்றாத இடைவிளக்கும்; பொய்கையிலே பூத்துத்
தாள்விளக்கும் தாமரைகள்; தளிர்விளக்கும் மேனி;
தமிழ்விளக்கும் உன்பேச்சை! எங்கிருந்தால் என்னாம்?
1

கால்இழுக்கக் கடற்கரையில் நீள்தாழை யோரம்
கடுவெயிலில் துடிதுடித்தே என்னோடு வந்தாய்!
வேலொத்த விழிப்புருவம் வில்லைப்போற் கோணா
வேகாது வெந்ததுண்டு! மறப்பதுண்டோ நெஞ்சம்?
ஆல்தழைத்து வீழ்திறங்கி அரண்மனைபோல் நிற்கும்
மணல்மேடும், கழிப்பூவும், புன்னைமர மொட்டும்
மால்நிறைந்த உன்பேச்சை, விழி,பல்லைக் காட்டும்!
மலர்க்காடே! என்னுயிரே! எங்கிருந்தால் என்னாம்?
2

அன்றொருநாள் நாமிருவர் ஆற்றோரம் குந்தி
அடர்நாணல் வெண்கதிரைச் செங்கதிராய் ஆக்கிக்
குன்றோரம் மறைகின்ற பைங்கதிரைக் கண்டோம்!
குளிர்புணலே! அதையெல்லாம் நான்மறந்தா போனேன்?
இன்றோநீ நெடுந்தூரம்! இருந்தாலும் என்னாம்?
என்றைக்கும் நாமொருவர் ஆற்ருேரத் தோப்பில்
தென்றலுனை என்னருகிற் கொண்டுவந்து சேர்க்கும்!

செடிப்பூக்கள் உன்சிரிப்பே! எங்கிருந்தால் என்னாம்?
3

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/22&oldid=1180052" இலிருந்து மீள்விக்கப்பட்டது